இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் சொந்த மண்ணில் ஆடவுள்ளது. இப்போதைய பேச்சு என்னவெனில் இங்கிலாந்தின் பேட்டிங் அணுகுமுறை பற்றியதே. அதாவது சமீப காலமாக இங்கிலாந்து பேட்டர்கள் வருவது வரட்டும் பிட்சாவது மண்ணாவது மட்டையை எடுத்தால் விளாசல்தான் என்று டெஸ்ட் போட்டிகளில் ஆடி அதில் நிறைய வெற்றிகளையும் குவித்து வருகிறார்கள், ஆனால், இந்த அணுகுமுறை இந்தியாவில் பலிக்குமா என்பதுதான் கேள்வி.

இந்நிலையில்தான் பும்ரா கூறுகிறார், ‘பாஸ்பால் அதிரடி காட்டினால் நான் விக்கெட்டுகளைக் குவிப்பேன்’ என்று. இவர் கூறுவது உண்மையா? ஏனெனில், பர்மிங்ஹாமில் இவரது கேப்டன்சியில் 5-வது டெஸ்ட் போட்டியில் ஆடியபோது இவரால் மட்டுமல்ல சிராஜ், ஷமி போன்றோராலும் விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை என்பதுதான் உண்மை. இப்போது வந்து மார்த்தட்டுவது இங்கிலாந்தை அதன் நோக்கத்திலிருந்து பின்னடையச் செய்வதாக மட்டுமேதான் பார்க்க முடியும். பும்ரா இதைச் செய்து விடுவார் என்பதாகப் பார்க்கப்பட முடியாது.

முதலில் பும்ரா கார்டியன் இதழுக்குக் கூறுவதைப் பார்ப்போம்: “டெஸ்ட் கிரிக்கெட்தான் கிங் என சொல்லும் தலைமுறையைச் சேர்ந்தவன் நான். டெஸ்ட் கிரிக்கெட் பவுலிங்கை வைத்தே நான் என்னை எடை போடுகிறேன். நான் ஐபிஎல் மூலம்தான் தொடங்கினேன். ஆனால், முதல் தர கிரிக்கெட் மூலம் கற்றுக் கொண்டேன். அங்குதான் என் திறமைகளை வளர்த்துக் கொண்டேன். அங்குதான் விக்கெட்டுகளை வீழ்த்தும் கலையைக் கற்றுக் கொண்டேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டரை வீழ்த்தியே ஆக வேண்டும், இது ஒரு பெரிய சவால்.

டி20-யிலும் ஒருநாள் போட்டிகளிலும் 5 ஸ்லோ பந்துகளை வீசி 5 பேட்டர்களை வீழ்த்தலாம், ஆனால் டெஸ்ட் போட்டிகள் அப்படியல்ல. அதிர்ஷ்டம் பெரிதும் வேலை செய்யாதது டெஸ்ட் கிரிக்கெட்டில்தான். ஏனெனில், நீங்கள் ஒரு அணியின் 20 விக்கெட்டுகளை வீழ்த்துவது அதிர்ஷ்டம் காரணமாக அல்ல. வெள்ளைப்பந்து கிரிக்கெட்டுடன் எனக்கு திருப்தி கிடைப்பதில்லை, டெஸ்ட் கிரிக்கெட்தான் எனக்கு ஆத்ம திருப்தி.

இங்கிலாந்தின் பாஸ்பால் அணுகுமுறையுடன் நான் என்னை தொடர்பு படுத்த விரும்பவில்லை. ஆனால், அது உற்சாகமாகத்தான் இருக்கிறது. இதனால் பவுலர்களுக்கும் வாய்ப்பு உள்ளதுதானே. இங்கிலாந்து வெற்றிகரமாக இதைப் பயன்படுத்துகின்றனர். எதிரணியினரை ஆக்ரோஷமாக டீல் செய்கின்றனர். டெஸ்ட் கிரிக்கெட்டை இப்படியும் ஆட முடியும் என்று காட்டுகிறார்கள்.

ஒரு பவுலராக நான் கூற வருவது என்னவெனில் இந்த அணுகுமுறை என்னைப் போன்ற பவுலர்களுக்கும் வாய்ப்பு வழங்குவதுதான். அவர்கள் வேகமாக விளையாடுவதன் மூலம் என்னைக் களைப்படையச் செய்ய மாட்டார்கள். அதனால் நான் விக்கெட்டுகளைக் குவிப்பேன். அவரவர்கள் கடைப்பிடிக்கும் வழியில் நான் எப்படி உள்ளே பூரலாம் என்றுதான் நான் பார்ப்பேன். அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஆனால், ஒரு பவுலராக நான் எப்போதும் ஆட்டத்தில் இருப்பேன்” என்கிறார்.

ஆனால், இவர் விக்கெட்டுகளைக் குவிப்பேன் என்று கூறுவது இருவிதங்களில் ஓவர் ஸ்டேட்மெண்ட் என்று கூறலாம். ஒன்று இந்தியாவில் போடப்படும் குழிப்பிட்ச்களில் ஒரு முனையில் எடுத்த எடுப்பிலேயே அக்சர் படேலோ, அஸ்வினோ வந்து விடுவார்கள். கடந்த முறை இங்கிலாந்து இங்கு வந்திருந்த போது பும்ரா 48 ஓவர்களை மட்டுமே வீச முடிந்தது. எங்கே விக்கெட்டுகளைக் குவிப்பது?

இரண்டாவது, பும்ராவே இங்கிலாந்தின் பாஸ்பால் அதிரடியில் சிக்கியதுதான். பர்மிங்ஹாமில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இவர்தான் கேப்டன். இங்கிலாந்து கண்டிஷனில் இவரால் 378 ரன்கள் வெற்றி இலக்கைத் தோல்வியிலிருந்து காப்பாற்ற முடியவில்லை. இங்கிலாந்து போட்டு புரட்டி எடுத்ததில் 378 ரன்கள் 79 ஓவர்கள்தான் தாங்கியது. ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ் போன்றவர்கள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை இறங்கி இறங்கி வந்து சாத்தினர். பும்ராவே 17 ஓவர்கள் வீசி 74 ரன்களை கொடுத்தார். சிராஜ் 15 ஓவர்கள், 98 ரன்கள். சர்துல் தாக்கூர் 11 ஓவர்கள், 65 ரன்கள்.

இந்த சாத்தையெல்லாம் பும்ரா மறந்து விடுவாரா? மறக்கத்தான் முடியுமா? ஆனால், விக்கெட்டுகளைக் குவிப்பேன் என்கிறார். பார்ப்போம், பும்ராவினால் முடியாதது என்று எதுவும் இல்லை என்று நம்புவோமாக.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *