பெங்களூருவில் நடந்த இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையேயான மூன்றாவது டி20 போட்டி சூப்பர் ஓவரிலும் டை ஆக இரண்டாவது சூப்பர் ஓவர் வரை போட்டி சென்றிருந்தது. இதில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றிருக்கிறது.

Rohit

சின்னசாமி மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் இந்திய அணியே முதலில் பேட்டிங் செய்திருந்தது. இந்திய அணியின் சார்பில் கேப்டன் ரோஹித் சர்மா சிறப்பாக ஆடியிருந்தார். முதல் 2 போட்டிகளிலும் டக் அவுட் ஆகியிருந்த ரோஹித் சர்மா இந்த போட்டியில் நிலைத்து நின்று ஆடி பெரிய இன்னிங்ஸை நோக்கி நகர்ந்தார். 69 பந்துகளை எதிர்கொண்டிருந்த ரோஹித் சர்மா 121 ரன்களை அடித்திருந்தார். டி20 போட்டிகளில் அவரின் ஐந்தாவது சதம் இதுவாகும். இதன் மூலம் சர்வதேச டி20 க்களில் அதிக சதம் அடித்த வீரர் எனும் சாதனையையும் செய்தார்.

ரோஹித்தின் அதிரடிக்குப் பக்கபலமாக இறுதிக்கட்டத்தில் ரிங்கு சிங்கும் சிக்ஸர்களை விளாசி அரைசதத்தைக் கடந்தார். இருவரின் அதிரடியால் கடைசி ஓவரில் மட்டும் இந்திய அணி 36 ரன்களை சேர்க்க ஸ்கோர் 212 ஆனது.

ஆப்கானிஸ்தான் சார்பில் அவர்களின் டாப் 3 பேட்டர்களும் அரைசதம் அடிக்க, போட்டி சுவாரஸ்யமாகச் சென்றிருந்தது. குல்பதீன் கடைசி வரை நின்று அனல் பறக்கச் செய்திருந்தார். கடைசி ஓவரில் 18 ரன்களை எடுத்து போட்டியை டை ஆக்கவும் செய்தார். போட்டி டை ஆனதால் சூப்பர் ஓவருக்கு ஆட்டம் சென்றது.

சூப்பர் ஓவரில் ஆப்கானிஸ்தான் முதலில் பேட் செய்து 16 ரன்களைச் சேர்த்தது. முகேஷ் வீசிய அந்த ஓவரின் கடைசிக்கு முந்தைய பந்தை முகமது நபி சிக்ஸராக்கினார். கடைசி பந்தில் 3 ரன்களை ஓடினார். இதில் நபிக்கும் ரோஹித்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நபி அந்தப் பந்தில் பீட்டன் ஆகியிருப்பார். ஆனாலும் ரன் ஓடியிருந்தார்.

Rohit

விக்கெட் கீப்பர் சாம்சன் ரன் அவுட்டுக்கு முயன்று பந்தை பௌலர் முகேஷுக்கு வீசுகையில் ஓடிக்கொண்டிருந்த நபியின் பேடில் பந்து பட்டு விலகிச் சென்றிருக்கும். இதற்கு பின்னரும் நபி ரன் ஓடியிருந்தார். இதனால்தான் ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் டென்ஷன் ஆகியிருந்தார்கள். ஆனாலும் ஆப்கானிஸ்தானுக்கு அந்த ரன்கள் கொடுக்கப்பட்டன.

இந்தியா 17 ரன்களை விரட்டியது. ரோஹித் சர்மா இரண்டு சிக்ஸர்களை அடிக்க கடைசிப் பந்தில் இந்தியாவின் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்டது. ஸ்ட்ரைக்கில் ஜெய்ஸ்வால் இருந்தார். இந்த சமயத்தில் ரோஹித் சர்மா ‘ரிட்டையர்டு அவுட்’ ஆகி ரிங்கு சிங்கை உள்ளே அழைத்தார். தன்னை விட ரிங்குவால் வேகமாக ஓட முடியும் என்பதால் ரோஹித் இந்த முடிவை எடுத்தார். ஆனால், ஒமர்சாய் சிறப்பாக பந்து வீச, இவர்களால் ஒரு ரன்னை மட்டுமே எடுக்க முடிந்தது. போட்டி மீண்டும் டை ஆனது. ஆட்டம் மீண்டும் சூப்பர் ஓவருக்குச் சென்றது.

Rohit – Rinku

இரண்டாவது சூப்பர் ஓவரில் இந்தியா முதலில் பேட்டிங். முதல் சூப்பர் ஓவரில் ரோஹித் அவுட் ஆகாததால் அவர் மீண்டும் களத்திற்குள் வந்தார். உடன் ரிங்கு சிங் இருந்தார். ‘ரிட்டையர்டு அவுட்’ ஆன ரோஹித் களமிறங்கலாமா எனும் சந்தேகம் ஆப்கானிஸ்தானுக்கு இருந்தது. இது குறித்து ஆப்கன் வீரர்கள் நடுவர்களிடமும் முறையிட்டனர். ஆனால், விதிப்படி அப்படிக் களமிறங்க வழியிருப்பதாக நடுவர்கள் ரோஹித்துக்கு அனுமதி அளித்தனர். முதல் பந்தில் சிக்ஸரையும் அடுத்த பந்தில் பவுண்டரியையும் அடித்து, பின்னர் சிங்கிள் தட்டினார் ரோஹித். பரித் அஹமது வீசிய அந்த ஓவரின் அடுத்த இரண்டு பந்துகளிலும் ரிங்குவும் சாம்சனும் அவுட்டாக இந்தியாவின் இன்னிங்ஸ் முடிந்தது. ஆப்கானிஸ்தானுக்கு 12 ரன்கள் டார்கெட்!

Ravi Bishnoi

ஆப்கானிஸ்தான் சார்பில் நபியும் குர்பாஸூம் ஓப்பனர்கள். இந்தியா சார்பில் ரவி பிஷ்னோய் பந்தைக் கையில் எடுத்தார். பிஷ்னோய் கூக்ளி வீசுவார் என எதிர்பார்த்து லெக் சைடில் வலுவாக அடிக்க நபி தயாராக, சுதாரித்த பிஷ்னோய் தனது அரிதான லெக் ப்ரேக்கை வீச, நபி லாங் ஆபில் கேட்ச் கொடுத்து அவுட்! அதேபோல மூன்றாவது பந்தில் குர்பாஸின் விக்கெட்டையும் பிஷ்னோய் வீழ்த்த, ஒரு வழியாக இந்தியா வென்றது.

இரண்டு முறை சூப்பர் ஓவருக்குச் சென்ற அரிதான ஆட்டங்களுள் ஒன்றாக மாறியதால் இந்தப் போட்டி சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லாமல் முடிந்தது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *