பிக் பாஸ் சீசன் 7 ல் தினேஷுக்கும் விஷ்ணுவுக்கும் நடக்கிற சண்டைதான் இன்றைய புரொமோ. `புரொமோ பொறுக்கி’ என விஷ்ணுவைப் பார்த்து தினேஷ் சொல்ல, தினேஷ் உட்கார்ந்திருந்த ஸ்டூலை எட்டி உதைத்த விஷ்ணு, “இந்த மிதிதான் உனக்கும்” என்கிறார்.

தொடர்ந்து விஷ்ணு தினேஷை நரி எனச் சொல்ல, பதிலுக்கு தினேஷ் அவரை அமுல் பேபி (சத்யா தொடரில் விஷ்ணுவை ஆயிஷா இப்படி அழைப்பார்) என்கிறார்.

பிக் பாஸ் செல்லலாமென வெளியான லிஸ்ட்டில் தினேஷ் – விஷ்ணு இரண்டு பேரின் பெயர்களையும் பார்த்தவுடனேயே நிச்சயம் அந்த வீட்டுக்குள் சண்டை இருக்கு என்றார்கள் இருவரையும் தெரிந்தவர்கள். ஆனால் நிகழ்ச்சி தொடங்கிய போது விஷ்ணு மட்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றார்.

அப்போது தினேஷ் செல்லாதது விஷ்ணுவுக்குப் பெரிய நிம்மதியைத் தந்ததாகப் பேசப்பட்டது. ஆனால் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் நான்கு வாரம் கழித்து தினேஷ் நிகழ்ச்சிக்குள் செல்ல, இதை விஷ்ணு உண்மையிலேயே எதிர்பார்க்கவில்லை. தினேஷின் என்ட்ரியின் போது விஷ்ணுவின் முகத்தைப் பார்த்தவர்களுக்கு இது புரியும்.

விஷ்ணு

இருவருக்குள்ளும் ஏற்கெனவே புகைந்து கொண்டிருந்த பகைதான் இப்போது வெடித்திருக்கிறது. அந்த முன்பகை குறித்துத் தெரிந்து கொள்ள வேண்டுமெனில், முதலில் தினேஷ் சில மாதங்களுக்கு முன் காவல் நிலையம் சென்ற விவகாரம் குறித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.

சீரியல்களில் ரச்சிதாவுக்குக் குரல் கொடுக்கும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஜி.ஜி. என்பவர்தான் தினேஷ் மீது கோடம்பாக்கம் காவல்நிலையத்தில் முதன் முதலில் புகார் கொடுத்தார். ரச்சிதா – தினேஷ் இருவருக்குமிடையிலான பிரச்னைக்கு ஜி.ஜி.தான் காரணமெனச் சொல்லி தினேஷ் அவரை மிரட்டியதாக அந்தப் புகார் கொடுக்கப்பட்டது.

அந்தப் புகார் குறித்து அப்போதே தினேஷிடம் நாம் பேசியிருந்தோம்.

“எங்க இருவருக்குமிடைப்பட்ட பிரச்னைக்கான காரணமே ஜி.ஜி.தான். அவங்க ரச்சிதாவைத் தப்பா கைடு பண்றாங்கண்ணு எனக்குத் தோணுச்சு. அதனால அது தொடர்பா உங்ககிட்டப் பேசணும்னு சொல்லித்தான் ஜி.ஜி-க்கு மெசேஜ் போட்டேன். இதுல எங்க மிரட்டல் இருக்கு? எங்கிட்டப் பேசப் பயந்து போலீஸ் ஸ்டேஷன் போயிருக்காங்க” என்றார் தினேஷ்.

தொடர்ந்து போலீஸ் விசாரணைக்கும் சென்று வந்தார் தினேஷ். அங்கு இரு தரப்பையும் விசாரித்து அப்போதைக்குச் சமாதானம் செய்து அனுப்பியிருக்கிறார்கள் போலீசார்.

ரச்சிதா

அந்தப் புகார் மனுவில், ‘என்னை மிரட்டுவது போல் சீரியல் நடிகர் விஷ்ணுவைக் கூட மிரட்டியிருக்கிறார் தினேஷ்’ எனக் குறிப்பிட்டிருந்தார் ஜி.ஜி.

இந்த விவகாரம் குறித்து அப்போதே விஷ்ணுவிடம் நாம் கேட்டதற்கு, “இது பத்திப் பேச விரும்பலை” எனச் சொல்லிவிட்டார்.

உண்மையிலேயே தினேஷ் விஷ்ணுவை மிரட்டினாரா என இருவருக்கும் பொதுவான நண்பர்களிடம் கேட்டோம்.

“மிரட்டினார்ங்கிறது மிகைப்படுத்தப்பட்டது. ரச்சிதாவுடன் ஒரு சீரியல்ல ஜோடியா நடிச்சார் விஷ்ணு. அந்தச் சமயத்துலதான் ரச்சிதா பிக் பாஸ் சீசன் 6க்குப் போனாங்க. நிகழ்ச்சி முடிச்சு ரச்சிதா வெளியே வந்ததும் புதுசா கார், வீடு வாங்க விரும்பினாங்க. அந்தச் சமயத்துல அது தொடர்பான சில உதவிகளை அவருக்குச் செய்திருக்கார் விஷ்ணு. இந்தத் தகவல் தினேஷுக்குத் தெரிய வந்ததும் விஷ்ணுவுக்கு அவர் போன் செய்திருக்கார். ஆனா ரச்சிதா சொல்லியோ என்னவோ தினேஷின் போனை விஷ்ணு எடுக்கவே இல்லை.” என்றனர்.

தினேஷிடமும் நாம் இந்த விவகாரம் குறித்துக் கேட்ட போது,

“விஷ்ணுவை நான் மிரட்டவே இல்லைங்க. ரச்சிதாவுக்கு கார், வீடு வாங்க அவர் உதவினதை நானும் வேற சிலர் சொல்லித்தான் தெரிஞ்சுகிட்டேன். அது தொடர்பா சாதாரணமா பேசலாம்னுதான் தொடர்பு கொண்டேன். என் போனை எடுக்கவே இல்லை. நேரில் பேசலாம்னு மெசேஜ் பண்ணியும் வரவே இல்லை.

என் போனை எடுத்து, ‘ஆமா, அவங்க ஹெல்ப் கேட்டாங்க, நான் பண்ணினேன்’னு சொல்ல வேண்டியதுதானே. எதுக்கு போனை எடுக்கப் பயப்படணும்? முன்னாடி சிலர் நண்பர்கள்ங்கிற போர்வையில ரச்சிதாகிட்ட பணம் வாங்கிட்டு ஏமாத்தினதெல்லாம் நடந்திருக்கு.

தினேஷ் – விஷ்ணு

அதுவும் போக நான் மிரட்டாத போது மிரட்டினேன்னு எப்படி ஜி.ஜி.க்குத் தகவல் போய், அவங்க அதைப் போலீஸ் புகார்ல சொல்றாங்க? இதுபத்தியும் கேக்கணும்னு விஷ்ணுவுக்கு போன் பண்ணினா, மறுபடியும் போனை எடுக்கலை” என்றார் அவர்.

அதாவது ரச்சிதா தன்னிடமிருந்து பிரிந்து செல்லக் காரணமென தினேஷ் நினைக்கிற ஜி.ஜி.யுடன் விஷ்ணுவுக்கு இருக்கும் நட்பு தினேஷை எரிச்சலை உண்டாக்கியிருந்த நேரத்தில்தான் இருவருக்குமே பிக் பாஸ் வாய்ப்பு அமைந்திருக்கிறது.

இருந்தாலும் வைல்டு கார்டு மூலம் தினேஷ் சென்று இரண்டு வாரம் எந்தப் பிரச்னையுமில்லை. இன்று திடீரென இருவரும் முட்டிக் கொண்டதன் பின்னணியில் இருவருக்குமிடையிலிருந்த அந்தப் பழைய சம்பவத்தின் தாக்கம் இருக்கலாமென்றே தெரிகிறது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *