பெங்களூரு: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு பெங்களூருவில் உள்ள சின்னாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா – நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் விராட் கோலி தனது 50-வது சதத்தை விளாசிவரலாற்று சாதனை நிகழ்த்த வாய்ப்பு கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் 13-வது பதிப்பின் லீக் ஆட்டங்கள் இன்றுடன் முடிவடைகின்றன. தொடரை நடத்தும் இந்தியா தனது கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்துடன் இன்று மோதுகிறது. நடப்பு தொடரில் இந்திய அணி 8 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று அசத்தி உள்ளது. இதனால் நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தையும் வெற்றியுடன் நிறைவு செய்வதில் இந்திய அணி தீவிரம் காட்டக்கூடும்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தனது 49-வது சதத்தை விளாசிய விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரின் அதிக சதங்கள் சாதனையை சமன் செய்திருந்தார். இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி மேலும் ஒரு சதம் விளாசி சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் தொடரில் கோலி, பெங்களூரு அணிக்காக விளையாடி உள்ளதால் ஆடுகளத்தின் தன்மையை மற்ற வீரர்களைவிட நன்கு அறிந்திருப்பார். இதனால் அவரிடம் இருந்து நிச்சயம் உயர்மட்ட செயல் திறன் வெளிப்படக்கூடும். நடப்புதொடரில் கோலி இதுவரை 543 ரன்களை குவித்துள்ளார். இது ஒருபுறம் இருக்க அரை இறுதி சுற்றுக்கு முன்னதாக இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி ஒரு சில விஷயங்களை மேம்படுத்திக் கொள்ள முயற்சிக்கக்கூடும்.

இந்திய அணியில் உள்ள அனைத்து பேட்ஸ்மேன்களும் தங்களது பங்களிப்பை வழங்கி வரும் நிலையில் சூர்யகுமார் யாதவ் மட்டுமே தடுமாறி வருகிறார். ஹர்திக் பாண்டியாவின் காயம் காரணமாக விளையாடும் லெவனில் இடம் பெற்ற சூர்ய குமார் யாதவ் தனது வாய்ப்பை இதுவரை திறம்பட பயன்படுத்திக் கொள்ளவில்லை.

4 ஆட்டங்களில் விளையாடி உள்ள சூர்யகுமார் யாதவ் 21.25 சராசரியுடன் 85 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். அணியில் உள்ள பேட்ஸ்மேன்களில் ஒரு அரை சதம் கூட அடிக்காத வீரராக உள்ள அவர், இன்றைய ஆட்டத்தில் மட்டையை சுழற்றி சீராக ரன்கள் சேர்க்க முயற்சி செய்யக்கூடும். இதேபோன்று தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் ஜோடியும் நிலைத்து நின்று விளையாடி சிறந்த அடித்தளம் அமைத்துக் கொடுப்பதில் கவனம் செலுத்தக்கூடும்.

இந்த ஜோடி 3 ஆட்டங்களில் மட்டுமே முதல் விக்கெட்டுக்கு 50-க்கும் மேற்பட்ட ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்தது. மற்ற 5 ஆட்டங்களிலும் விரைவாக ஆட்டமிழந்துள்ளனர். வங்கதேச அணிக்கு எதிராக 12.4 ஓவர்களில் 88 ரன்களையும், நியூஸிலாந்துக்கு எதிராக 11.1 ஓவரில் 71 ரன்களும், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 5.5 ஓவர்களில் 62 ரன்களையும் ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் ஜோடி விளாசியிருந்தது.

மற்ற 5 ஆட்டங்களில் இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு முறையே 5, 32, 23, 26 மற்றும் 4 ரன்களே சேர்த்தது. இதனால் இன்றைய ஆட்டத்தில் ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் ஜோடி கூட்டாக பெரிய அளவில் ரன் வேட்டை நிகழ்த்துவதில் கவனம் செலுத்தக்கூடும். தொடர்ச்சியாக 8 ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்றதால் இந்த சிறிய குறைகள் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

எனினும் இவற்றை அரை இறுதி சுற்றுக்கு முன்னதாக சரி செய்து கொள்வதில் இந்திய அணி முனைப்பு காட்டக்கூடும். பந்து வீச்சில் இந்திய அணி நடப்பு தொடரில் எதிரணிகளுக்கு கடும் நெருக்கடிளை கொடுத்து வருகிறது. ஜஸ்பிரீத் பும்ரா, மொகமது ஷமி, மொகமது சிராஜ் ஆகியோர் வேகப்பந்து வீச்சில் சவால்கள் அளித்து வரும் நிலையில் சுழலில் ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் எதிரணியின் பேட்ஸ்மேன்களை திணறடித்து வருகின்றனர். இவர்கள் மீண்டும் ஒரு முறை எழுச்சியுடன் செயல்பட ஆயத்தமாக இருக்கின்றனர்.

நெதர்லாந்து அணி 8 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி,6 தோல்விகளுடன் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை ஏற்கெனவே இழந்துவிட்ட அந்த அணி வலுவான இந்தியாவுக்கு எதிராக கவனிக்கத் தக்க வகையிலான செயல் திறனை வெளிப்படுத்த முயற்சி செய்யக்கூடும்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *