திருப்பத்தூர் அடுத்த ஜோலார்பேட்டைக்கு அருகில் உள்ளது ஏலகிரி கிராமம். இந்த ஏலகிரி கிராமத்தை ஒட்டி அமைந்துள்ளது ஏலகிரி ஏரி. இந்த ஏலகிரி ஏரி நாளுக்கு நாள் மாசடைந்து கொண்டே போகிறது. இந்த ஏரியின் கரையோர நிலங்கள் முழுமையாக மாசடைந்து காணப்படுகிறது. சில காலங்களாகவே இந்த ஏரியின் கரை ஓரங்களில் மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்குகின்றன. அது மட்டுமில்லாமல் கரையோரங்களில் மருத்துவ கழிவுகளும் காணப்படுகிறது.

இது குறித்து கிராம மக்களிடம் பேசியபோது, ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்திலிருந்து வரும் கழிவு நீரும், ஏலகிரி ஏரிக்கு அருகே அமைந்துள்ள கோடியூர், ஹோட்டல் தெரு போன்ற இடங்களில் வரும் அனைத்து கழிவுநீரும் இந்த ஏரியில் கலப்பது தான் இவற்றுக்கு முக்கிய காரணம் என்று குற்றம்சாட்டினர்.
கோடியூர் பகுதிகளிலிருந்து வரும் அனைத்து கழிவுநீரும் தற்போது இந்த ஏலகிரி ஏரிலேயே கலக்கின்றன. கழிவு நீர் மட்டுமல்லாமல் அந்தக் கழிவு நீரோடு சேர்ந்து அனைத்து வகையான குப்பைகளும் மது பாட்டில்களும் இந்த ஏரியில் வந்து கலக்கின்றன என்று வேதனை தெரிவிக்கிறார்கள் அப்பகுதியினர். இது குறித்து பலமுறை தகுந்த அதிகாரிகளிடம் கூறியும் எந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று சாடும் மக்கள், இந்தக் கழிவு நீர் பிரச்னைகள் குறித்து நிறைய முறை செய்திகளில் வந்தாலும் கூட அதிகாரிகள் எவ்விதமான நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறார்கள்.




குறிப்பாக, இந்த ஏலகிரி கரை ஓரப்பகுதியிலேயே ஏரியோடு சேர்ந்து சுடுகாடு ஒன்று அமைந்துள்ளது. மழை காலங்களில் இந்த ஏரியில் நீர் அதிகமாகும் போது, அந்த சுடுகாட்டை முழுவதுமாக மூடிக்கொள்கிறது. மேலும், சுடுகாட்டை ஒட்டி உள்ள பகுதிகளில் ஏலகிரி ஊராட்சியை சேர்ந்தவர்களே கிராமப்புறங்களில் உள்ள குப்பைகளை இப்பகுதியில் கொட்டுகின்றன .

மேலும், வெளியூரை சார்ந்தவர்கள், மக்கள் யாரும் இல்லாத போதும் இரவு நேரங்களில் வந்து பிராய்லர் கழிவுகளையும், குப்பைகளையும் கொட்டி விடுகின்றனர். சில சமயங்களில் அவற்றை தீவைத்து எரித்தும் விடுகின்றனர். இதன் மூலம் துர்நாற்றத்துடன் கூடிய ஆபத்தான கரும்புகைகள் வீசுகின்றன. அதைத் தடுக்க அங்கு அறிவிப்பு பலகைகள் வைத்த பிறகும் கூட குப்பையை அங்கே கொட்டுகின்றனர்.
மேலும், அக்கரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதன் காரணமாக அவ்வழியாக செல்லும் போது மூக்கை மூடிக்கொண்டுதான் செல்ல முடிகிறது என்று மக்கள் வேதனை தெரிவித்தனர். மருத்துவ கழிவுகள் குறித்து விசாரித்த போது, `மற்ற ஊர்களைச் சார்ந்தவர்கள், இரவு நேரங்களிலோ யாரும் இல்லாத நேரத்திலோ ஊசி போடுவதற்காக பயன்படுத்தப்படும் மருந்து பாட்டில்களை உபயோகப்படுத்தி விட்டு தூக்கி போட்டு விட்டுச் சென்று விடுவதாக குறிப்பிட்டனர். தற்போது நாளுக்கு நாள் மீன்கள் அதிகமாக இறந்த நிலையில் கரை ஒதுங்குவதன் காரணமாகவும். கழிவு நீரும், குப்பைகளும் அதிகமாக சேர்ந்து நிலத்தையும் மாசுப்படுத்துவதன் காரணமாகவும் மீன்கள் பிடிக்க அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏலகிரி கரையோர பகுதிகளில் உள்ள நிலங்கள் கழிவுநீராலும், குப்பைகளாலும் முழுமையாக மாசடைந்து இருப்பதன் காரணமாக அருகே வசிக்கும் மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் மிகுதியாக இருக்கிறது. மாநிலத்தில் பல பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவலாக இருக்கும் நிலையில், கழிவுகளையும் குப்பைகளையும் அகற்றுவதோடு நிற்காமல், கழிவுநீர் மற்றும் குப்பைகள் கலக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்தப் பகுதி மக்களின் பெரும் கோரிக்கை! இந்தப் பிரச்சினையை கவனித்து தகுந்த நடவடிக்கை எடுக்குமா இந்த அரசு நிர்வாகம்?!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY