லார்ட்ஸ்: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ள முயற்சி செய்வோம் என இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.

நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி ஒருநாள் போட்டித் தொடரை 3-1 எனகைப்பற்றி கோப்பையை வென்றது. நேற்று முன்தினம் இரவு லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 311 ரன்கள் குவித்தது.

டேவிட் மலான் 127, ஜாஸ் பட்லர் 36, ஜோ ரூட் 29, லியாம் லிவிங்ஸ்டன் 28 ரன்கள் சேர்த்தனர். 312 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நியூஸிலாந்து அணி 38.2 ஓவர்களில் 211 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 61, ஹென்றி நிக்கோல்ஸ் 41, கிளென் பிலிப்ஸ் 25 ரன்கள் சேர்த்தனர். இங்கிலாந்து அணி சார்பில் மொயின் அலி 4 விக்கெட்கள் வீழ்த்தினார்.

வெற்றிக்கு பின்னர் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் கூறும்போது, “எங்கள் பாணியிலான கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம். டேவிட் மலான் அற்புதமாக விளையாடினார். பந்து வீச்சாளர்களை அழுத்தத்தில் வைத்தபடி ஆக்ரோஷமாக விளையாடினார். மேலும் ஆட்டத்தின் சூழ்நிலையை நன்றாக அறிந்து செயல்பட்டார். பந்து வீச்சில் எங்களுக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்தது.

இதனால் விக்கெட்களை விரைவாக வீழ்த்தினோம். மொயின் அலி, லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோரால் என்ன செய்ய முடியும் என்பதை நாங்கள் அறிவோம். இது எங்களுக்கு ஆழமான வரிசையை வழங்குகிறது. உலகக்கோப்பையை தக்க வைத்துக்கொள்வதற்கு சிறந்த நிலையில் உள்ளோம். அணி சிறப்பாக கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்தியா சென்று வெற்றிபெற முயற்சி செய்வோம். ஆனால் இதே நிலையில்தான் மற்ற அணி வீரர்களும் இருப்பார்கள். இதனால் இம்முறை உலகக் கோப்பை தொடர் சுவாரசியமாக இருக்கும்” என்றார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *