அஷ்வினுக்கு அபராதம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி vs ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இடையேயான ஆட்டத்தின் போது, நடுவர்களின் செயல்பாட்டை விமர்சித்ததற்காக அஷ்வினுக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது. ஆட்டம் முடிந்த பிறகு பேசிய அஷ்வின், “நடுவர்கள் பனியின் காரணமாக பந்தை தாங்களாகவே மாற்றியது, எனக்கு மிகவும் ஆச்சரியமளிக்கிறது. பந்தை மாற்றுவதற்கு முன் நடுவர்கள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டனிடம் கலந்தாலோசிக்கவில்லை. இதற்கு முன்பு இது போன்று நடந்ததில்லை.” என பேசியிருந்தார். இதற்கு, ஐபிஎல் நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக, அந்த போட்டிக் கட்டணத்திலிருந்து அவருக்கு 25% அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

ashwin

மீண்டும் `விசில் போடு எக்ஸ்பிரஸ்!’

வருகிற 30ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடவுள்ளது. இப்போட்டியை இலவசமாகக் காண, கன்னியாகுமரி முதல் சென்னை வரை மீண்டும் விசில் போடு எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல் மற்றும் திருச்சி உள்ளிட்ட நகரங்கள் வழியே இந்த எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது.

CSK

இப்போட்டியைக் காண வரும் 750 ரசிகர்களுக்கான அனைத்து செலவுகளையும் சிஎஸ்கே நிர்வாகம் ஏற்றுக்கொள்ளும் என அறிவித்துள்ளது.

மேலும், இன்று முதல் இதற்கான முன்பதிவை www.chennaisuperkings.com என்ற இணையதளத்தில் ரசிகர்கள் செய்யலாம் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

தோனியின் காயம் குறித்து விளக்கம்:

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் போட்டி முடிந்த பிறகு, காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தோனி மெதுவாக தாங்கி தாங்கி நடந்து சென்ற வீடியோ வெளியாகி வைரலானது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன், “தோனிக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டிருப்பது, உண்மைதான். ஆனால் அவர், இதை எங்களிடம் சொல்லவில்லை. இந்த காயம், அணியின் அடுத்த நகர்வுகளுக்கு எந்த சிக்கலையும் ஏற்படுத்தாது. தோனி, அணிக்காக தொடர்ந்து விளையாடுவார்.” எனக் கூறியுள்ளார். மேலும் பென் ஸ்டோக்ஸ் காயம் குறித்துப் பேசிய அவர், வருகின்ற 30-ஆம் தேதி பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் களமிறங்குவார் என தெரிவித்துள்ளார்.

வரலாற்றுச் சாதனையாளரான ரபாடா!

நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளரான ரபாடா, விருத்திமான் சாஹாவின் விக்கெட்டை வீழ்த்தினார். இந்த ஒற்றை விக்கெட்டின் மூலம், ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை காகிசோ ரபடா பெற்றுள்ளார். இதுவரை 64 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 100 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ரபாடா |Rabaada

பஞ்சாப் ஜெர்ஸியை வழங்கிய ப்ரீத்தி ஜிந்தா!

மொஹாலி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது, குஜராத் டைட்டன்ஸ் அணி. இந்த போட்டியைக் காண வந்த பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஓனர் ப்ரீத்தி ஜிந்தா, மைதானத்தைச் சுற்றி அமர்ந்திருந்த ரசிகர்களுக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஜெர்ஸியை வழங்கினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *