பிரதமர் பயணத்தில் பாதுகாப்பு குளறுபடி விவகாரம்: சுப்ரீம் கோர்ட் இன்று விசாரணை..!

Estimated read time 1 min read

டெல்லி,

காங்கிரஸ் கட்சி ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில் வளர்ச்சி திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காக கடந்த 5-ம் தேதி பிரதமர் மோடி பஞ்சாபிற்கு பயணம் மேற்கொண்டார்.
அவர் பெரோஸ்பூர் மாவட்டத்தில் நடைபெற விருந்த நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக பயண திட்டம் மாற்றப்பட்டது. அதன்படி அவர் சாலை வழியாக காரில் சென்றார். அவருடன் பாதுகாப்பு வாகன அணிவகுப்பும் சென்றது.
ஆனால் வழியில் உள்ள ஒரு மேம்பாலத்தில் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததால் பிரதமர் கார் நிறுத்தப்பட்டது. வாகன அணிவகுப்பும் தொடர முடியவில்லை. 20 நிமிடங்கள் காத்திருந்தும் நிலையில் மாற்றம் இல்லை. இதனால் பிரதமர் மோடி அங்கிருந்து திரும்பினார். அவரது நிகழ்ச்சிகளும் ரத்தாகின. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாகி சூடுபிடித்து வருகிறது.
பிரதமர் பயண வழித்தடத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக பஞ்சாப் அரசு, மத்திய அரசு சார்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், பிரதமர் பயண வழித்தடத்தில் ஏற்பட்ட தீவிரமான பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் மூத்த வக்கீல் மணிந்தர் சிங் முறையிட்டார்.
இந்த விவகாரத்தின் மீது கடந்த வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்ட தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூரிய காந்த், ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வு பிரதமரின் பயணத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடிகள் தொடர்பான ஆவணங்களை பத்திரப்படுத்த பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டிற்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது. இன்று நடைபெற உள்ள விசாரணையின் போது பிரதமரின் பயணத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் தொடர்பாக விரிவான விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்ட குழு அமைத்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours