பெங்களூரு:
ரூ. 3 கோடி பண மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கர்நாடகாவில் கைது செய்யப்பட்டார். கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகத்தின் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ரூ.3 கோடி மோசடி செய்த புகாரில் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவருடைய உதவியாளர்கள் நான்கு பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மோசடி வழக்கில் முன்ஜாமீன் கோரிய அவரது மனுவை சென்னை உயர்நீதிமன்றம் டிச. 17ல் தள்ளுபடி செய்தது. இதையடுத்து ராஜேந்திரபாலாஜி தலைமறைவானார்.
தலைமறைவாகிய ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருப்பதற்காக நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் ‘‘லுக் அவுட் நோட்டீஸ்’’ அனுப்பப்பட்டுள்ளது. இதனால் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து ராஜேந்திர பாலாஜியை விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கணேஷ்தாஸ் தலைமையில் 8 தனிப்படைகள் தேடி வந்தன.இந்த நிலையில் கர்நாடகாவில் பதுங்கி இருந்த ராஜேந்திர பாலாஜியை தனிப்படை போலீஸ் சுற்றி வளைத்தது. போலீஸ் வாகனத்தை கண்டு தப்பியோட முயன்ற ராஜேந்திர பாலாஜி போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட ராஜேந்திர பாலாஜியை ஹசன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு தமிழ்நாடு அழைத்து வர தனிப்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
+ There are no comments
Add yours