சென்னை:

சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்டர் கொள்ளை வழக்கில் திடீர் திருப்பமாக ரயில்வே ஊழியரே பணத்தை திருடிவிட்டு நாடகமாடியது அம்பலம் ஆகியுள்ளது.
சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே, இரு மார்க்கத்திலும் மின்சார ரயில்கள் அதிகாலை 4 மணி முதல் நள்ளிரவு 11 மணி வரை இயக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தை தினமும் அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என, ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணியளவில் டிக்கெட் கவுண்டரில் கொள்ளை நடந்ததாக புகார் எழுந்தது.  முகமூடி அணிந்திருந்த மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கி முனையில் தன்னை கட்டி போட்டு விட்டு, பெட்டியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த 1 லட்சத்து 32 ஆயிரத்து 500 ரூபாயை கொள்ளையடித்து சென்றதாக டிக்கெட் கவுண்டர் ஊழியர் டீக்காராம் மீனா (28), புகார் அளித்து இருந்தார். இதுதொடர்பாக, ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து, எஸ்பி அதிவீர  பாண்டியன் தலைமையில் 2 தனிப்படை அமைத்து கொள்ளையர்களை வலைவீசி தேடினர்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ரயில் நிலைய சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த ரயில்வே தனிப்படை போலீசார், கொள்ளையர்கள் வந்து சென்றதற்கான சுவடு இல்லாததை கண்டறிந்தனர். சந்தேகத்தின் பேரில் டீக்கா ராமை பிடித்து விசாரித்ததில், அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். தொடர்ந்து சிசிடிவி கேமராக்களை ரயில்வே போலீசார் ஆய்வு செய்ததில் கொள்ளை நடந்ததாக கூறப்பட்ட அதிகாலை நேரத்தில் ரயில் நிலையத்திற்கு பெண் ஒருவர் வந்து சென்றது பதிவானது. அந்த பெண், ரயில்வே ஊழியர் டீக்காராமின் மனைவி என தெரியவந்தது. அதிகாலையில் மனைவியை வரவழைத்து தன்னை கட்டிப் போடவைத்து டீக்காராம் கொள்ளை நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.

இதையடுத்து மனைவியுடன் சேர்ந்து ரயில்வே ஊழியர் டீக்காராம், ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 500 ரூபாயை கொள்ளையடித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து, திருவான்மியூர் ரயில் நிலைய ஊழியர் டீக்காராம், அவரது மனைவி கைது செய்யப்பட்டனர். மேலும் டீக்கா ராம் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரைத்துள்ளனர்.

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *