சென்னை:
புதுக்கோட்டையில் நார்த்தாமலை அருகே அம்மாசத்திரத்தில் சிஐஎஸ்எஃப் துப்பாக்கி பயிற்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் துணை ராணுவ வீரர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் நேற்று சிஐஎஸ்எஃப் வீரர்கள் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு வீரர் துப்பாக்கியிலிருந்து 2 தோட்டாக்கள் சுமார் ஒன்றரை கிலோமீட்டர் போய் விழுந்தது. அதில் ஒன்று முத்து என்பவரின் வீட்டின் சுவற்றை துளைத்தது.
துப்பாக்கி குண்டு பாய்ந்தது
மற்றொன்று வீட்டில் சாப்பிட்டு கொண்டிருந்த அவரது பேரன் புகழேந்தியின் (11) தலையில் பாய்ந்தது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் சிறுவன் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான்.
கவலைக்கிடம்?
தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மூளை நரம்பியல் மருத்துவ குழுவினர் சிறுவனுக்கு தொடர்ந்து 4 மணிநேரம் அறுவை சிகிச்சை செய்து, தலையில் இருந்த குண்டு அகற்றப்பட்டது. இதனை தொடர்ந்து சிறுவனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுவனின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது கூறப்படுகிறது
பொதுமக்கள் சாலை மறியல்
இந்த பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சிறுவனின் பெற்றோர்கள் கீரனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
+ There are no comments
Add yours