அமெரிக்கா;
இந்த மையமானது இறையியலாளர்கள், விஞ்ஞானிகள், அறிஞர்கள் மற்றும் சட்ட வல்லுனர்கள் ஆகியோரை இணைத்து ஒன்றாக சிந்திக்கும் வகையிலான மாநாட்டை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
வேற்று கிரக வாசிகள் பற்றிய தகவல்கள் என்றாலே எப்போதும் நமக்கு சுவாரசியம் குறையாமல் அவற்றை அறிய முற்படுவோம். அந்த அளவிற்கு வேற்று கிரக வாசிகளை பற்றி நாம் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம். மற்ற கிரகத்தில் உயிரினங்கள் வாழ்கிறதா என்பதை பல கோணங்களில் ஆய்வு செய்து வந்துள்ளோம். இதுவரை நம்மிடம் உள்ள தொழில்நுட்பத்தை கொண்டு இவற்றை ஆய்வு செய்து வந்திருக்கிறோம். ஆனால் நாம் எட்ட வேண்டிய தூரம் இன்னும் அதிகமாக உள்ளது.
அந்த வகையில், ஒரு வேளை வேற்று கிரக வாசிகள் இருப்பது உண்மையானால் மனிதர்கள் எப்படி அதற்கு எதிர்வினை ஆற்றுவார்கள் என்பதை அறிந்து கொள்ள நாசா விரும்புகிறது. மேலும் இதன்மூலம் மனிதர்களுக்கு கடவுள் மற்றும் உயிரினங்களின் தோற்றம் பற்றிய கண்ணோட்டம் வேறுபடலாம் என்பதாலும் இப்படியொரு ஏற்பாட்டை செய்ய உள்ளது. இந்நிலையில் நியூஜெர்சியில் இருக்கும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள இறையியல் விசாரணை மையத்தில் (Center for Theological Inquiry) 24 பாதிரியார்களை நியமித்துள்ளது. இதற்காக 2014 ஆம் ஆண்டே சுமார் $1.1 மில்லியன் அமெரிக்க டாலர்களை நாசா தரப்பில் வழங்கியுள்ளது.
மேலும் இந்த மையமானது இறையியலாளர்கள், விஞ்ஞானிகள், அறிஞர்கள் மற்றும் சட்ட வல்லுனர்கள் ஆகியோரை இணைத்து ஒன்றாக சிந்திக்கும் வகையிலான மாநாட்டை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக குழப்பத்தில் இருக்க கூடிய சில கேள்விகளுக்கு விடை தரும் வகையில் இத்திட்டம் செயல்பட உள்ளது. உதாரணமாக “வாழ்க்கை என்றால் என்ன? உயிர் வாழ்வதற்கான அர்த்தம் என்ன? மனிதர்களும் வேற்று கிரகவாசிகளும் எந்த புள்ளியில் ஒன்று சேர்கின்றனர்? பூமியை தவிர்த்து மற்ற கிரகங்களில் உயிரினங்கள் வாழ்கின்றனவா? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அறிந்து கொள்ளும் முயற்சியாக இந்த திட்டம் அமைய உள்ளது.
நாசா தற்போது, செவ்வாய் கிரகத்தில் இரண்டு ரோவர்களையும், வியாழன் மற்றும் சனி கிரகத்தை சுற்றி வரும் பல ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகிறது. பிரபஞ்சத்தில் உள்ள விண்மீன், நட்சத்திரம் மற்றும் கிரகங்களின் உருவாக்கம் குறித்து ஆய்வு செய்யும் ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்பையும் நேற்று விண்ணில் வெற்றிகரமாக ஏவியுள்ளது. மேலும் பூமிக்கு வெளியே உள்ள உயிர்களைக் கண்டறியும் நம்பிக்கையில் நாசா உள்ளது.
நாசா நியமித்த இந்த 24 பாதிரியார்களில் ஒருவராக, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மத அறிஞரான பாதிரியார் டாக்டர் ஆண்ட்ரூ டேவிசன் இடம்பெறுள்ளார். மேலும் இவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உயிர் வேதியியல் பாடப்பிரிவில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். இவர் எழுதிய புத்தகம் ஒன்று அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. இதற்கு ‘வானுயிரியல் மற்றும் கிறிஸ்தவ கோட்பாடு’ (Astrobiology and Christian Doctrine) என்று பெயரிடப்பட்டுள்ளது.
வேற்றுகிரகத்தில் உயிரினங்கள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்வதில் மத மரபுகள் முக்கிய அம்சமாக இருக்கும். மேலும் இத்திட்டத்தின் மூலம், மற்ற கிரகங்களில் உயிர்கள் இருப்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் நாம் நெருங்கி வருகிறோம் என்று பாதிரியார் ஆண்ட்ரூ குறிப்பிட்டுள்ளார்.
+ There are no comments
Add yours