நாட்டு மக்களிடம் ’மன் கீ பாத்’ (Mann Ki Baat) மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை உரையாற்றி வரும் பிரதமர் மோடி (PM Modi) , இந்த ஆண்டின் கடைசி உரையை இன்று நிகழ்த்தினார். அப்போது, கொரோனாவுக்கு எதிராக இந்தியா கடுமையாக போராடி வருவதாக கூறினார். வைரஸைக் கட்டுப்படுத்துவதில் அரசு எடுக்கும் முயற்சிக்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுப்பதாக கூறிய பிரதமர் மோடி, இப்போது வேகமாக பரவி வரும் ஒமிக்ரானையும் எதிர்கொள்ள மக்கள் தயாராக வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். ஒவ்வொருவரின் வீடுகளின் கதவையும் வைரஸ் தட்டுவதாகவும், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தினார்.
தமிழகத்தில் நடைபெற்ற ஹெலிக்காப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் ராணுவ தளபதி பிபின் ராவத் மற்றும் கேப்டன் வருண்சிங்கின் தியாகங்களை நினைவு கூர்ந்த அவர், அவர்களின் சேவை போற்றுதலுக்குரியது எனத் தெரிவித்தார். கேப்டன் வருண் சிங் மரணத்தையும் எதிர்த்து கடைசி வரை போராடியதாக கூறிய பிரதமர் மோடி, கேப்டன் வருண்சிங்கின் வாழ்க்கை ஒட்டுமொத்த தேசத்துக்கும் முன்மாதிரியாக அமைந்துவிட்டதாக புகழாரம் சூட்டினார்.
பாகிஸ்தானுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றதன் 50வது ஆண்டில் இந்தியா இருப்பதாகவும், இதற்காக பாடுபட்ட ராணு வீரர்களுக்கு பாராட்டுகளையும் கூறினார். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, ஸ்டார்அப்களின் வீடாக இந்தியா இருப்பதாக தெரிவித்தார். நாடு முழுவதும் நாள்தோறும் ஏராளமான ஸ்டார்ட் அப்கள் தொடங்கப்படுவதாகவும், அதில் 70க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்கள் உலகளவில் மிகப்பெரிய வெற்றியை அடைந்திருப்பாதக தெரிவித்தார். 2021 ஆம் ஆண்டின் இறுதியில் இருக்கும் மக்கள், புத்தாண்டை வரவேற்க தயாராக வேண்டும், புதிய இலக்கு நிர்ணயித்து, இப்போது இருக்கும் நிலையைவிட ஒருபடி முன்னேற வேண்டும் என்ற நோக்கில் பயணிக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். மேலும், நல்ல புத்தகங்களை படித்து, அதனை மற்றவர்களும் படிக்குமாறு பரிந்துரைக்குமாறு அறிவுறுத்தினார்.
+ There are no comments
Add yours