சென்னை:

ஆபாச வீடியோவை வைத்து மிரட்டி பணம் பறித்த இளைஞரை, கூலிப்படை வைத்தே கொன்றுள்ளனர் 15 வயது பெண்கள்.. இப்படி ஒரு சம்பவம் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மண்ணிவாக்கம் கருமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்.. இவர் ஒரு கூலி தொழிலாளி.. மனைவி பெயர் செல்வி.. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்…

இதில், கடைசி மகன் பெயர் பிரேம்குமார்.. 20 வயதாகிறது.. சென்னை கிண்டியில் ஒரு தனியார் கல்லூரியில் பிஏ 3ம் ஆண்டு படித்து வந்தார்.

வீடியோ

இந்நிலையில், இவருக்கு 2 பள்ளி மாணவிகளுடன் பழக்கம் ஏற்பட்டது.. அவர்கள் வண்டலூர் அடுத்த ஓட்டேரி பகுதியை சேர்ந்தவர்கள்.. இருவருமே 10ம் வகுப்பு மாணவிகள். இருவருக்குமே 15 வயதாகிறது. இந்த மாணவிகளிடம் நெருங்கி பேசி வந்த பிரேம்குமார், அவர்களின் ஆபாச வீடியோவை அனுப்ப சொல்லி உள்ளார்.. அதற்கு மாணவிகள் மறுக்கவும், அந்த மாணவிகளுக்கே தெரியாமல் அவர்களை ஆபாசமாக தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்..

அசோக்

அந்த வீடியோவை வைத்து அவர்கள் 2 பேரையும் மிரட்ட தொடங்கி உள்ளார்.. “நான் கேட்கும்போதெல்லாம் பணம் தராவிட்டால் சோஷியல் மீடியாவில் இந்த வீடியோக்களை வெளியிட்டுவிடுவேன்” என்று அடிக்கடி மிரட்டி உள்ளார்.. இதனால் பயந்துபோன மாணவிகளும் பிரேம்குமாருக்கு பணம் தந்து வந்திருக்கிறார்கள்.. இப்படியே ஒரு வருடமாக ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் பறித்துள்ளார் பிரேம்குமார்.. இப்படிப்பட்ட சூழலில்தான், 2 மாணவிகளுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் அசோக் என்ற இளைஞர் பழக்கமானார்..

டார்ச்சர்

அவர் ரெட்ஹில்ஸ் அடுத்த சோழவரம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர்.. 3 மாதமாக அசோக் பேசிய விதம் மாணவிகளுக்கு நம்பிக்கையை தந்தது.. இதையடுத்து, 2 மாணவிகளும், பிரேம்குமார் பற்றி அசோக்கிடம் சொன்னார்கள். தங்களை மிரட்டி பணம் பறித்து வந்ததையும், தினம் தினம் பிரேம்குமார் டார்ச்சர் அதிகமாகி கொண்டே போவதாகவும் சொல்லி அழுதுள்ளனர்… இதனால் அதிர்ச்சி அடைந்த அசோக், மாணவிகளுக்கு தைரியம் சொல்லி, பிரேம்குமாரை தனியாக வரும்படி அழைக்க சொல்லி உள்ளார்..

ரெட்ஹில்ஸ்

அதன்படியே 2 பெண்களும், டிசம்பர் 17ம் தேதி இரவு பிரேம்குமாருக்கு போன் செய்து, “நீ கேட்ட பணத்தை தருகிறோம் ரெட்ஹில்ஸ் பகுதிக்கு கிளம்பி வா” என்று அழைத்துள்ளனர். உடனே பிரேம்குமாரும், 12ம் வகுப்பு பள்ளி மாணவன் பிரவீனை அழைத்துக்கொண்டு ரெட்ஹில்ஸ் பகுதிக்கு பைக்கில் சென்றார்.. 2வது டோல்கேட் அருகே சென்றபோது மாணவிகள் பிரேம்குமாருக்கு போன் செய்தனர்.. என்ன கலர் டிரஸ் அணிந்து வருகிறாய் என்று கேட்டனர்.. அதற்கு பிரேம்குமார் அடையாளம் சொன்னதும், 3 பைக்குகளில் வந்த மர்ம கும்பல் பிரேம்குமாரை சரமாரியாக அடித்து தாக்கி உள்ளது..

கடத்தல்

பிறகு, அவர்கள் வந்த பைக்கிலேயே பிரேம்குமாரையும் கடத்தி சென்றுவிட்டது. இதை பார்த்ததும் நண்பர் பிரவீன் அலறியடித்துகொண்டு வீட்டிற்கு ஓடினார்… பிரேம்குமார் பெற்றோரிடமும் நடந்ததை எல்லாம் சொன்னார்.. இதனால் பதறிப்போன பெற்றோரும் மாணவிகள் வீட்டுக்கு சென்று மகனை பற்றி விசாரித்தனர்.. தங்களுக்கு எதுவுமே தெரியாது என்று 2 மாணவிகள் வீட்டிலும் சொன்னார்கள்.. இதையடுத்து ஓட்டேரி போலீசில் பிரேம்குமாரின் பெற்றோர் மகனை காணவில்லை என்று புகார் தந்தனர்..

ஆரம்பாக்கம்

போலீசாரும் இது தொடர்பாக 2 மாணவிகளிடம் விசாரித்தனர்.. அபபோதுதான், பிரேம்குமார் கடத்தப்பட்டதை மாணவிகள் சொன்னார்கள்.. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்தது போலீஸ்.. இதனிடையே, பிரேம்குமாரை திருவள்ளூருக்கு கடத்தி சென்ற கூலிப்படை கும்பல், ஆரம்பாக்கம் என்ற பகுதியில் ரூம் ஒன்றில் அடைத்து 2 நாட்களாக சித்ரவதை செய்ய ஆரம்பித்துள்ளனர்.. பிறகு சரமாரியாக பிரேம்குமாரை வெட்டி ஈச்சங்காட்டு மேடு கிராமம் அருகே உள்ள ஏரியில் புதைத்து விட்டனர்..

கைது

ஏரிக்கரையில் வெட்டி புதைக்கப்பட்ட பிரேம்குமாரின் சடலத்தை தாசில்தார் முன்னிலையில் தோண்டி எடுத்த போலீசார், அரசு மருத்துவமனைக்கு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்… இப்போது 15 வயதே ஆன மாணவிகள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்… 10ம் வகுப்பு மாணவிகள் கூலிப்படையை ஏற்பாடு செய்து கல்லூரி மாணவரை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *