சென்னை:
மாங்காட்டில் 11ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த மாணவர் மீது போக்சோ, பாலியல் வன்கொடுமை, தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாங்காடு மாணவி பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. அந்த 11 வகுப்பு மாணவி நேற்று தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவர் எழுதிய கடைசி கடிதத்தை நேற்று போலீசார் பறிமுதல் செய்தனர். அதேபோல் அந்த மாணவியின் செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மாணவிக்கு பள்ளியிலோ அல்லது உறவினர்களிடம் இருந்தோ பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது.
வாட்ஸ் ஆப் சாட்
மாணவியின் போனில் இருந்த வாட்ஸ் ஆப் சாட்கள் அடிப்படையில் போலீசார் நேற்று முதல் நாளில் இருந்து இரண்டு இளைஞர்களிடம் விசாரணை நடத்தி வந்தனர். அந்த 2 பேரின் செல்போன் சாட் அந்த மாணவியின் போனில் இருந்துள்ளது. அந்த மாணவியிடம் இரண்டு பேரும் செல்போனிலும், வாட்ஸ் ஆப்பிலும் அடிக்கடி பேசி தொல்லை கொடுத்துள்ளனர் என்று போலீஸ் தரப்பு நம்மிடம் தெரிவித்தது.இதை பற்றி நேற்றே நாம் Exclusive செய்தி வெளியிட்டு இருந்து இருந்தோம்.
இளைஞர்
அதில் ஒருவர் கல்லூரி இளைஞர். இன்னொருவர் 17 வயது மட்டுமே கொண்ட மைனர். இரண்டு பேரும் அந்த மாணவியிடம் போனில் சாட் செய்துள்ளனர். அதில் கல்லூரி இளைஞர் அந்த மாணவியிடம் பாலியல் ரீதியாக அடிக்கடி ஆபாசமாக பேசி உள்ளார். இந்த சாட்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
ஆபாசம்
அதோடு அந்த மாணவியை கல்லூரி இளைஞர் சாட்டில் அவ்வப்போது மிரட்டியும் வந்துள்ளார். இந்த நிலையில்தான் நேற்று முழுக்க அந்த கல்லூரி மாணவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையின் முடிவில் அந்த மாணவியின் தற்கொலைக்கு கல்லூரி மாணவரும் காரணமாக இருந்திருக்கலாம் என்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
வழக்கு
இதையடுத்து மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவர் மீது போக்சோ, பாலியல் வன்கொடுமை, தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
+ There are no comments
Add yours