ஹைதராபாத்:

நம்மிடம் நெருங்கி பழகுபவர்களுக்கு ஏதேனும் நல்ல விஷயம் நடந்து விட்டால் ”நீ பிறக்கும்போதே அதிர்ஷ்டகாரன்” என்று வேடிக்கையாக சொல்வது வழக்கம். ஆனால் தெலுங்கானாவில் பிறக்கும்போதே 2 பச்சிளம் குழந்தைகள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகளாய் பிறந்துள்ளன. இதனை பற்றி இப்போது காண்போம். தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் டெப்போவுக்குச் சொந்தமான அரசு பேருந்து நவம்பர் 30-ம் தேதி வழக்கம்போல் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. பெத்தகொத்தப்பள்ளி கிராமம் அருகே பேருந்து சென்றபோது அதில் இருந்த கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

 

அழகான பெண் குழந்தைகள் பிறந்தது

உடனடியாக அந்த பேருந்து ஓரமாக நிறுத்தப்பட்டது. அதில் இருந்த பெண் பயணிகள் சிலர் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்தனர். அப்போது அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதேபோல் டிசம்பர் 7-ம் தேதி சித்திப்பேட்டை அருகே தெலுங்கானா மாநில அரசு பேருந்து சென்றபோது, அதில் பயணம் செய்த மற்றொரு கர்ப்பிணிக்கும் பெண் குழந்தை பிறந்தது.

 

நலமாக உள்ளனர்

இந்த இரண்டு இடங்களிலும் தெலுங்கானா மாநில சாலைப் போக்குவரத்துக் கழக (TSRTC) பணியாளர்கள் சுகாதாரத்துறை அதிகாரிகளை உடனடியாக தொடர்பு கொண்டு தாய் மற்றும் சேய்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தற்போது இரண்டு குழந்தைகளும், அவர்களின் அம்மாக்களும் நன்றாக உள்ளனர்.

 

குழந்தைகளுக்கு அடித்த ஜாக்பாட்

வித்தியாசமான சூழ்நிலையில் பிறந்த இந்த பச்சிளம் குழந்தைகளுக்குதான் அதிர்ஷ்டம் கிட்டியுள்ளது. அதாவது இந்த இரண்டு குழந்தைகளுக்கும் பிறந்தநாள் பரிசாக அவர்கள் இருவரும் தெலுங்கானா மாநில அரசு பேருந்தில வாழ்நாள் முழுவதும் இலவசமாக பயணம் செய்யலாம் என்று மாநில போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

அனுமதி சீட்டு

வாழ்நாள் முழுவதும் இலவசமாக பயணம் செய்யும் விதமாக அதற்கான அனுமதிச் சீட்டுகளை TSRTC துணைத் தலைவரும் நிர்வாக இயக்குனருமான V. C. சஜ்ஜனார் குழந்தைகளின் பெற்றோர்களிடம் வழங்கியுள்ளார். கர்ப்பிணிகளின் பிரசவத்திற்கு உதவி செய்த TSRTC பணியாளர்கள் மற்றும் பயணிகளையும் அவர் பாராட்டினார். பிறக்கும்போதே அதிர்ஷ்டசாலிகளாய் பிறந்த குட்டி பாப்பாக்களை பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *