சேலம் அருகே தொடர்ந்து இரண்டாவது முறையாக நீட்தேர்வு எழுதி தோல்வியடைந்ததால் விஷம் அருந்திய மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வடக்குமரை கிராமத்தைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளர்கள் கணேசன் – தனலட்சுமி தம்பதியின் மகன் சுபாஷ் சந்திரபோஸ். ஏழ்மையான சூழலில் வளர்ந்த மாணவன் சுபாஷ் சந்திரபோஸ் மருத்துவராக வேண்டும் என்ற கனவில் இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்பு முடித்த சுபாஷ் சந்திரபோஸ் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வில் வெற்றி பெற முயற்சி செய்து வந்துள்ளார்.



இந்நிலையில், முதல் முறை நீட்தேர்வில் 158 மதிப்பெண்களும், நடப்பு ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் 261 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். தொடர்ந்து இரண்டு முறையும் நீட் தேர்வில் வெற்றி பெற முடியாத காரணத்தால் கடந்த ஒன்றாம் தேதி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் தங்கள் மகனை மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.



அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஏற்கனவே நீட் தேர்வு எழுத பயந்து சேலம் மேட்டூர் அருகே தனுஷ் என்ற மாணவர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கி இருந்த நிலையில், சேலத்தில் மேலும் ஒரு மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை – 600 028.
தொலைபேசி எண் – (+91 44 2464 0050, +91 44 2464 060

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *