குர்தாஸ்பூர்: டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் பஞ்சாப் மாநிலத்தை கட்டுப்படுத்தி வருவதாக வெள்ளிக்கிழமை அன்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். பஞ்சாப் மாநிலத்தின் குர்தாஸ்பூர் நகரில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் அவர் தெரிவித்தது.

“பஞ்சாப் மாநிலத்தில் ரிமோட் கன்ட்ரோல் ஆட்சி நடந்து வருகிறது. இது துரதிருஷ்டவசம். டெல்லி தர்பாரில் உள்ள ஆம் ஆத்மி தலைவர்கள் அதை செய்து வருகின்றனர். பஞ்சாப் மாநில முதல்வரால் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாது.

ஜுன் 1-ம் தேதிக்கு பிறகு ஊழல்வாதி சிறை செல்ல வேண்டும். இந்த நிலையில் மீண்டும் பஞ்சாப் மாநிலத்தை சிறையில் இருப்பவர்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டுமா? இங்கு காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதும் இதுதான் நடந்தது.

இருந்தும் அப்போது முதல்வராக இருந்த கேப்டன் அமரீந்தர் சிங் அதனை ஏற்கவில்லை. எல்லையோர மாநிலம் என்பதால் தேசிய பாதுகாப்பில் அவர் கவனம் செலுத்தினார். அதன் பலனாக அவரை முதல்வர் பொறுப்பில் இருந்து நீக்கியது காங்கிரஸ் தலைமை. அந்த அவமதிப்பை யாரும் மறந்திருக்க முடியாது.

காஷ்மீரில் தீவிரவாதம் மீண்டும் இருக்க வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். அதனால் தான் காஷ்மீரில் மீண்டும் 370-வது சட்டப் பிரிவை கொண்டு வருவது குறித்து பேசி வருகிறார்கள். பிரிவினைவாதிகள் வசம் மீண்டும் அந்த பகுதியை ஒப்படைக்க விரும்புகிறார்கள். பாகிஸ்தானுக்கு நட்பு ரீதியிலான தூது விடுகிறார்கள். அதன் ஊடாக பாகிஸ்தான், நம் நாட்டில் குண்டு வெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தும்.

பஞ்சாப் மாநில வளர்ச்சிக்கு நான் முன்னுரிமை தருகிறேன். பாஜக அரசு இங்கு சாலை கட்டமைப்பில் கவனம் செலுத்துகிறது. ரயில் போக்குவரத்து மேம்பாடு சார்ந்த பணிகளிலும் எங்களது கவனம் உள்ளது. மாநிலத்தில் உள்ள விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்த பாஜக விரும்புகிறது” என பிரதமர் மோடி பேசினார்.

வரும் ஜுன் 1-ம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 மக்களவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக, ஷிரோமணி அகாலி தளம் போன்ற கட்சிகள் தனித்தனியாக மாநிலத்தில் போட்டியிடுகின்றன.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *