‘2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெற்று மூன்றாவது முறையாக மோடி தலைமையில் ஆட்சியமைக்கும்’ என்ற கருத்தை தேர்தல் வியூக வல்லுநராக பிரசாந்த் கிஷோர் தொடர்ந்து சொல்லிவருகிறார். ஐந்து கட்டத் தேர்தல் முடிந்த நிலையில், அதே நிலைப்பாட்டுடன்தான் அவர் இருக்கிறார்.

யோகி, மோடி

இந்த நிலையில், ‘தி வயர்’ இணையதள சேனலுக்கு அளித்த நேர்காணலிலும் பிரசாந்த் கிஷோர் தனது நிலைப்பாட்டை உறுதிபடத் தெரிவித்திருக்கிறார். அந்த நேர்காணலில், பிரசாந்த் கிஷோரை நேர்காணல் செய்த மூத்த ஊடகவியலாளரான கரண் தாப்பர், எழுப்பிய சில கேள்விகளுக்கு உரிய பதிலைச் சொல்ல முடியாமல் பிரசாந்த் கிஷோர் டென்ஷன் ஆனது தற்போது பேசுபொருளாகி இருக்கிறது.

இதுவரை ஐந்து கட்டத் தேர்தல் முடிவடைந்து, இன்னும் இரண்டு கட்டத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. தற்போது, பா.ஜ.க-வுக்கு அதிக செல்வாக்கு இருக்கும் பகுதிகளில், 2019 மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்கு சதவிகிதத்தைவிட குறைவாகப் பதிவாகியிருக்கிறது. அதனால், பா.ஜ.க ஏமாற்றம் அடைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள் என்ற கேள்வியை கரண் தாப்பர் முன்வைத்தார். அதற்கு, “வாக்கு சதவிகிதம் குறைவதாலோ, அதிகரிப்பதாலோ ஆளும் கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் என்று சொல்ல முடியாது. அதற்கு, எந்த ஆதாரங்களும் இல்லை” என்றார் பிரசாந்த் கிஷோர்.

கரண் தாப்பர், பிரசாந்த் கிஷோர்

மேலும், ‘வாக்குப் பதிவு குறைந்ததால் தேர்தல் முடிவுகளை நினைத்து பா.ஜ.க கவலையடைகிறதா?’ என்ற கேள்வியை கரண் தாப்பர் முன்வைத்தார். அதற்கு, ‘அப்படி இல்லை. பா.ஜ.க-வினர் கவலையடைகிறார்கள் என்று கூற மாட்டேன். மிகப்பெரிய கட்சி என்பதால் வாக்குப்பதிவு குறைந்தது அவர்களுக்கு சிறிய அளவில் வருத்தம் ஏற்பட்டிருக்கலாம். வாக்குப்பதிவையும். தேர்தல் முடிவையும் நேரடியாக தொடர்புபடுத்த முடியாது’ என்று பிரசாந்த் கிஷோர் பதிலளித்தார்.

‘முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க எதிர்க்கட்சிகள் முயல்கின்றன. மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்’ என்று தனது பிரசாரத்தில் பிரதமர் மோடி கூறிவருகிறார். இது, தேர்தல் முடிவு குறித்த அச்சத்தின் வெளிப்பாடுதானே என்று கரண் தாப்பர் கேட்டார். அதற்கு, ‘நான் அப்படிப் பார்க்கவில்லை. அவர்கள் தேர்தல் முடிவு குறித்து கவலை கொள்வதாக நான் நினைக்கவில்லை. இந்து – முஸ்லிம் விவகாரத்தை தேர்தலில் அவர்கள் பேசுவது வழக்கமான ஒன்றுதான்’ என்றார்.

மோடி

இமாச்சலப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. ஆனால், அந்த மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, ‘அங்கு காங்கிரஸ் தோல்வியடையும்’ என்று பிரசாந்த் கிஷோர் கூறியிருந்தார். அதைக் குறிப்பிட்டு கரண் தாப்பர் கேள்வி எழுப்பினார். ‘இமாச்சலப்பிரதேசத்தில் காங்கிரஸ் தோற்கும் என்று சொன்னீர்கள். ஆனால், அங்கு காங்கிரஸ் வெற்றிபெற்றது. தற்போது நீங்கள்,300+ இடங்களில் பா.ஜ.க வெற்றி பெறும் என்று கூறுகிறார்கள். உங்கள் கருத்தை எப்படி எடுத்துக்கொள்வது?’ என்று கரண் தாப்பர் கேட்டார்.

ஆனால், ‘இமாச்சலப்பிரதேசத்தில் காங்கிரஸ் தோற்கும் என்று நான் சொல்லவே இல்லை’ என்ற பிரசாந்த் கிஷோர், அதற்கான ஆதாரத்தைக் கேட்டார். உடனே, அவ்வாறு பிரசாந்த் கிஷோர் கூறியதற்கான ஆதாரமாக முன்னணி நாளேடுகளில் வெளியான செய்திகளை கரண் தாப்பர் காண்பித்தார். ஆனால், அதை ஏற்க மறுத்த பிரசாந்த் கிஷோர். ‘அவ்வாறு நான் பேசியதற்கான வீடியோ ஆதாரத்தை காண்பியுங்கள்’ என்றார்.

பிரசாந்த் கிஷோர்

அதற்கு, ‘நீங்கள் சொன்னது எழுத்து வடிவில் செய்தியாகியிருக்கிறது. அதனை ஏற்க மறுக்கிறீர்கள்’ என்றார். வீடியோ ஆதாரத்தைக் காண்பியுங்கள் என்று தொடர்ந்து சொல்லி பிரசாந்த் கிஷோர், ‘நான் கூறியதைத்தான் பத்திரிகைகளில் எழுதினார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?’ என்று கேட்டார். மேலும், ‘நான் பேசியது குறித்த வீடியோ இருந்தால், அதைக் காட்டுங்கள்’ என்று திரும்பத் திரும்ப சொன்னார் பிரசாந்த கிஷோர். இப்படியாக அந்த நேர்காணல் படு சூடாகவே இருந்தது.

கரண் தாப்பரின் கிடுக்கிப்பிடி கேள்விகளுக்கு பதில் சொன்ன பிரசாந்த் கிஷோர், நேர்காணலுக்கு இடையே தண்ணீர் குடித்தார். உடனே, ‘பிரசாந்த் கிஷோரை கரண் தாப்பர் தண்ணீர் குடிக்க வைத்துவிட்டார்’ என்று சமூக ஊடகங்களில் பலர் எழுதினார்கள்.

நரேந்திர மோடி

அதற்கு, ‘தண்ணீர் குடிப்பது நல்லது. ஏனெனில், இது மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும். இந்தத் தேர்தலின் முடிவைப் பற்றிய எனது மதிப்பீட்டைக் கண்டு திகைப்பவர்கள் ஜூன் 4-ம் தேதி போதுமான அளவுக்கு தண்ணீரைக் கையில் வைத்திருக்க வேண்டும்’ என்று தனது எக்ஸ் பக்கத்தில் பிரசாந்த் கிஷோர் கூறியிருக்கிறார்.

2019 மக்களவைத் தேர்தலில் 303 இடங்களில் பா.ஜ.க வெற்றிபெற்றது. ஆனால், ‘இந்தத் தேர்தலில் விலைவாசி, வேலையின்மை போன்ற காரணங்களால் பா.ஜ.க மீது மக்களுக்கு அதிருப்தி கடுமையாக இருக்கிறது’ என்று கூறும் எதிக்கட்சியினர், ‘பா.ஜ.க-வுக்கு 220 இடங்கள்தான் கிடைக்கும்’ என்கிறார்கள். ஆனால், ‘பா.ஜ.க-வுக்கு 300 இடங்கள் கிடைக்கும்’ என்று பிரசாந்த் கிஷோர் போன்றோர் சொல்லிவருகிறார்கள்.

அதே நேரம், ‘உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் பா.ஜ.க-வுக்கு சீட் குறைய வாய்ப்பு இருக்கிறது’ என்று கூறும் அரசியல் நோக்கர்கள், ‘வட மாநிலங்களில் ஏற்படும் இழப்பை கிழக்கு, தென் மாநிலங்களில் பெறும் இடங்களிலிருந்து பா.ஜ.க ஈடுகட்டவும் வாய்ப்பிருக்கிறது’ என்றும் சொல்கிறார்கள்.

பிரசாந்த் கிஷோர்

ஆனால், ‘தென் மாநிலங்களில் பா.ஜ.க-வுக்கு சொல்லிக்கொள்ளும்படியாக சீட் கிடைக்காது’ என்று கூறும் எதிர்க்கட்சியினர், ‘பா.ஜ.க-தான் வெற்றிபெற்று ஆட்சியமைக்கப்போகிறது, 370 இடங்களில் பா.ஜ.க ஜெயிக்கும்’ என்ற மோடியின் கருத்துக்கு வலுச்சேர்க்கவும் விதமாக பிரஷாந்த் கிஷோர் பேசியதை நேர்காணலில் கரண் தாப்பர் காலிசெய்துவிட்டார்’ என்கிறார்கள்.

‘பிரசாந்த் கிஷோரிடம் உரிய தரவுகள் இல்லை. அவர் களத்துக்குப் போய் ஆய்வும் மேற்கொள்ளவில்லை. பிறகு, அவர் எதன் அடிப்படையில் பா.ஜ.க ஜெயிக்கும் என்கிறார்?’ என்பது எதிர்க்கட்சிகளின் கேள்வியாக இருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *