மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா உட்பட 600-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், நீதித்துறை அச்சுறுத்தலுக்குள்ளாகியிருப்பதாகவும், அரசியல் மற்றும் தொழில்சார் அழுத்தங்களிலிருந்து நீதித்துறையைப் பாதுகாக்க வேண்டுமெனவும் தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு கடிதம் எழுதியிருக்கின்றனர். அதில், “நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கவும், நீதித்துறை செயல்பாட்டில் செல்வாக்கு செலுத்தவும், அற்பமான தர்க்கங்கள் மற்றும் பழமையானவற்றின் அடிப்படையில் நீதிமன்றங்களை அவதூறு செய்யவும் ஒரு குழு முயன்று வருகிறது. அரசியல் வழக்குகளில், குறிப்பாக ஊழல் குற்றம் சாட்டப்பட்ட அரசியல் பிரமுகர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் அழுத்தம் கொடுப்பதற்கான முயற்சி. இது நமது நீதித்துறைக்குச் சேதம் விளைவிப்பதோடு நமது ஜனநாயக கட்டமைப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது.

இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட்

கடந்த காலமே சிறந்த காலம், அவையே நீதிமன்றங்களின் பொற்காலம் என்ற தவறான கதைகளை உருவாக்கி, நிகழ்காலத்தில் நடக்கும் நிகழ்வுகளுடன் அதை வேறுபடுத்திக் காட்டுகின்றனர். இவை நீதிமன்றத் தீர்ப்புகளைத் திசை திருப்பவும், சில அரசியல் ஆதாயங்களுக்காக நீதிமன்றத்தைச் சங்கடப்படுத்தவும் வேண்டுமென்றே செய்யப்பட்டவையன்றி வேறொன்றுமல்ல. சில வழக்கறிஞர்கள் பகலில் அரசியல்வாதிகளுக்காக வாதாடுவதும், பின்னர் இரவில் ஊடகங்கள் மூலம் நீதிபதிகள் மீது செல்வாக்கு செலுத்த முயற்சிப்பதும் கவலையளிக்கிறது. கடந்த காலங்களில் நீதிமன்றங்களில் செல்வாக்கு செலுத்துவது எளிதாக இருந்தது என்பதாக அவர்கள் குறிப்பிடுவது பொதுமக்களின் நம்பிக்கையை உலுக்குகிறது.

`பெஞ்ச் ஃபிக்சிங் (Bench Fixing)’ என்ற முழுக் கோட்பாட்டையும் அவர்கள் உருவாக்கியிருக்கின்றனர். இது நம் நீதிமன்றங்களின் மரியாதை மற்றும் கண்ணியத்தின் மீதான தாக்குதல். சில சமயங்களில், இது மரியாதைக்குரிய நீதிபதிகள் மீது அவதூறான தாக்குதல்கள் மற்றும் தூண்டுதல்களுக்கு வழிவகுக்கிறது. சட்டத்தின் ஆட்சி இல்லாத நாடுகளுடன் ஒப்பிடும் நிலைக்கு அவர்கள் நமது நீதிமன்றங்களைத் தள்ளுகிறார்கள். இது நம் நீதித்துறையின் மீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைச் சேதப்படுத்தும். மேலும், இவை நமது சட்டங்களின் நியாயமான பயன்பாட்டை அச்சுறுத்தும் நேரடி தாக்குதல். தனிப்பட்ட மற்றும் அரசியல் காரணங்களுக்காக நீதிமன்றங்களைக் குறைத்து மதிப்பிடும் இந்த முயற்சிகளை எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்க முடியாது.

உச்ச நீதிமன்றம்

இந்த தாக்குதல்களிலிருந்து நமது நீதிமன்றங்களைப் பாதுகாக்க உச்ச நீதிமன்றம் வலுவாக நின்று நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைதியாக இருப்பதோ அல்லது எதுவும் செய்யாமலிருப்பதோ, தீங்கு செய்ய விரும்புபவர்களுக்கு அதிக பலத்தைக் கொடுக்கும். இது போன்ற முயற்சிகள் சில வருடங்களாக அடிக்கடி நடந்து வருவதால், கண்ணியமான மவுனம் காப்பதற்கான நேரம் இதுவல்ல. நமது நீதிமன்றங்கள் நமது ஜனநாயகத்தின் தூண்களாக வலுவாக இருப்பதை உறுதிசெய்து, நாம் ஒன்றுபட்டு இந்தத் தாக்குதல்களுக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும். இந்த இக்கட்டான காலங்களில் உங்களின் தலைமை மிகவும் முக்கியமானது. நீங்கள் மற்றும் அனைத்து மாண்புமிகு நீதிபதிகளும் இந்தப் பிரச்னைகளின் மூலம் எங்களை வழிநடத்தி நீதிமன்றங்களை வலுவாக வைத்திருப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மோடி

இந்த நிலையில், இதற்கு எதிர்வினையாற்றும் விதமாகக் காங்கிரஸை பிரதமர் மோடி சாடியிருக்கிறார். இது தொடர்பாக, அந்தக் கடிதத்தை மோடி தனது X சமூக வலைதளப் பக்கத்தில் ஷேர் செய்து, “பிறரைத் துன்புறுத்துவதே பழைய காங்கிரஸ் கலாசாரம். 5 தசாப்தங்களுக்கு முன்பே அவர்கள் `உறுதியான நீதித்துறை’ வேண்டி அழைப்பு விடுத்தனர். தங்களின் சுயநலத்துக்காக மற்றவர்களிடமிருந்து அர்ப்பணிப்பை விரும்புகிறார்கள். ஆனால், தேசத்தின்மீதான எந்தவொரு அர்ப்பணிப்பிலிருந்தும் விலகிவிடுறார்கள். அதனால், 140 கோடி இந்தியர்கள் அவர்களை நிராகரிப்பதில் எந்தவொரு ஆச்சர்யமுமில்லை” என்று சாடி ட்வீட் செய்திருக்கிறார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *