என்ன விலை கொடுத்தாவது மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியைத் தக்கவைப்பது என்ற முடிவுடன் பா.ஜ.க தீவிரமாக வேலை செய்துவருகிறது. மூன்று மத்திய அமைச்சர்கள், ஏழு எம்.பி-க்கள், ஒரு பொதுச்செயலாளர் ஆகியோரை மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் பணிகளுக்காக பா.ஜ.க நியமித்தது. இந்தக் குழுதான், மத்தியப் பிரதேசத்தில் பிரதமர் மோடியின் சூறாவளி சுற்றுப்பயணத்தை வடிவமைத்தது.

நவம்பர் 17-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் மத்தியப் பிரதேசத்தில், பா.ஜ.க-வுக்கு ஆதரவாகத் தீவிர பிரசாரம் மேற்கொண்டார் பிரதமர் மோடி. அப்போது, ‘காங்கிரஸ் ஓர் ஊழல் மலிந்த கட்சி… பழங்குடியினச் சமூகத்தை காங்கிரஸ் புறக்கணித்தது. தற்போது, காங்கிரஸ் தலைவர்கள் மக்களிடம் என்ன சொல்வார்கள்… காங்கிரஸின் போலி வாக்குறுதிகளால், மோடியின் வாக்குறுதிகளுக்கு முன்னால் நிற்க முடியாது. இந்தத் தேர்தல், மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸின் ஊழலையும், கொள்ளையையும் தடுத்து நிறுத்துவதற்கான தேர்தல்’ என்று மோடி விமர்சித்தார்.