ராய்ப்பூர்: சத்தீஸ்கர் முதல்கட்ட தேர்தலின் போது நக்ஸல் தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளுக்கு தேர்தல் அலுவலர்கள் விமானப் படையின் ஹெலிகாப்டர்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர்.

சத்தீஸ்கரில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளில் முதல்கட்டமாக 20 தொகுதிகளுக்கு கடந்த 7-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தொகுதிகளில் 223 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தமுள்ள 40.78 லட்சம் வாக்காளர்களில் 78 சதவீதம் பேர் வாக்கினை பதிவு செய்தனர். இது வரலாற்று சாதனையாக பார்க்கப்படுகிறது.

முதல்கட்ட தேர்தல் நடை பெற்ற மோலா மன்பூர், அந்தகர், பானுபிரதாப்பூர், காங்கேர், கெஸ்கல், கொண்டாகோன், நாரா யண்பூர், தந்தேவாடா, பிஜாபூர், கோண்டா ஆகிய தொகுதிகளில் நக்சல் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகம் உள்ளது.

இந்த தொகுதிகளில் வாக்காளர்களின் வசதி, பாதுகாப்பு கருதி கூடுதலாக வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. கூடுதல் போலீஸார், மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பஸ்தர் மாவட்டத்தில் மட்டும் 600 வாக்குச்சாவடிகளில் 60,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் குவிக்கப்பட்டனர்.

ஒவ்வொரு தேர்தலின்போதும் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருக்கும் பகுதிகளுக்கு தேர்தல் அலுவலர்கள், ஹெலிகாப்டரில் அழைத்து செல்லப்படுவது வழக்கம். இந்த முறை விமானப் படையின் எம்ஐ-17 ரகத்தை சேர்ந்த 8 ஹெலிகாப்டர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. தேர்தலையொட்டி 6 நாட்களில் 404 முறை ஹெலிகாப்டர் சேவைகள் இயக்கப்பட்டன.

இதுகுறித்து சத்தீஸ்கர் தலைமை தேர்தல் அதிகாரி ரீனா சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: சத்தீஸ்கரில் நக்சல் ஆதிக்கம் நிறைந்த 43 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளுக்கு விமானப் படையின் ஹெலிகாப்டர்கள் 404 முறை இயக்கப்பட்டன. 853 தேர்தல் அலுவலர்கள் பத்திரமாக ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த சேவைக்காக இந்திய விமானப் படைக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன். இவ்வாறு ரீனா தெரிவித்துள்ளார்.

கடந்த 2018-ம் ஆண்டு சத்தீஸ்கர் தேர்தலின்போதும் தேர்தல் அலுவலர்களை அழைத்துச் செல்ல ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. அப்போது பிஜாப்பூரில் தீவிரவாதிகள் சுட்டதில் ஹெலிகாப்டர் விமானி முஸ்தபா அலி உயிரிழந்தார். மற்றொரு விமானி சவுத்ரிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. எனினும் அவர் காயத்துடன் ஹெலிகாப்டரை இயக்கி ஜக்தல்பூரில் பத்திரமாக தரையிறக்கினார்.

மாநில டிஜிபி சுந்தர்ராஜ் கூறும்போது, ‘‘கடந்த 7-ம் தேதி நடைபெற்ற தேர்தலின்போது ஹெலிகாப்டர் புறப்படும் இடம், சேரும் இடத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால் அசம்பாவிதங்கள் தடுக்கப்பட்டன. தீவிரவாதிகளின் அச்சுறுத்தலை விமானப்படை, போலீஸார் இணைந்து வெற்றிகரமாக முறியடித்தனர். இதன் காரணமாக வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்திருக்கிறது’’ என்று தெரிவித்தார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *