நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவிகித (மூன்றில் ஒரு பங்கு) இடங்களை ஒதுக்கீடு செய்யும் `மகளிர் இடஒதுக்கீடு’ மசோதா 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. காங்கிரஸ் உட்பட பல எதிர்க்கட்சிகள் கட்சிகள் இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துவந்தாலும், இன்னொருபுறம் 2024 தேர்தலை மனதில் வைத்துதான் பா.ஜ.க இதனை தற்போது கொண்டுவந்திருக்கிறது என்று விமர்சித்தும் வருகின்றன.

இடஒதுக்கீடு

காரணம் இப்போது இந்த மசோதா நிறைவேற்றப்பட்டாலும் கூட, 2027-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி நிர்ணயங்கள் முடிவான பிறகு 2029-ல் தான் நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இதில் விமர்சிக்க என்ன இருக்கிறது என்று கேள்வியெழுந்தாலும் கூட, தொடர்ந்து 10-வது ஆண்டாக பா.ஜ.க ஆட்சியிலிருக்கும் இருக்கும் சூழலில், கடந்த 2021-லேயே மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும், உண்மையில் பா.ஜ.க-வுக்கு பெண்களின் மீது அக்கறை இருந்திருந்தால் அவர்கள் ஆட்சிக்கு வந்த உடனே இதைக் கொண்டுவந்திருந்தால் இந்நேரம் அது நடைமுறையில் இருந்திருக்கும் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.

இதே குற்றச்சாட்டை முன்வைத்த, ராஜ்ய சபா எம்.பி-யும், முன்னாள் மத்திய அமைச்சருமான கபில் சிபல், “மகளிர் இடஒதுக்கீடு மசோதா மூலம், 2024-ல் பா.ஜ.க ஆதாயம் பெற நினைக்கிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டத்தைக் கொண்டுவந்திருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். இதில் வரலாற்றுச் சிறப்பு என்ன இருக்கிறது. அப்படியென்றால் 2014-லேயே இதை அவர்கள் கொண்டுவந்திருக்க வேண்டும்.

கபில் சிபல்

இப்போது மகளிர் இடஒதுக்கீடு மசோதா நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன் மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி நிர்ணய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஒருவேளை, மக்கள்தொகை கணக்கெடுப்பும், தொகுதி நிர்ணயமும் நடைபெறவில்லையென்றால் என்ன செய்வது” என்று கேள்வியெழுப்பியிருந்தார்.

இந்த நிலையில் கபில் சிபலின் கூற்றுக்கு எதிர்வினையாற்றியிருக்கும் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், “2008-ல் கபில் சிபல் மத்திய அமைச்சராக இருந்தார். அப்போது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி இந்த மசோதாவை தாக்கல் செய்த அடுத்த ஆண்டு, நாடு லோக் சபா தேர்தலைச் சந்தித்தது. காங்கிரஸ் வெறுமனே சட்டத்தைக் கொண்டுவருவது போல் நடிக்கிறது என்பது அவருக்குத் தெரியும். மேலும், இந்த மசோதா நிறைவேற்றப்படுவதற்குப் பதிலாக நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது.

அனுராக் தாகூர்

காங்கிரஸ், அப்போதும் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க விரும்பவில்லை, இப்போதும் விரும்பவில்லை. அதோடு காங்கிரஸ், இந்திரா காந்தியின் தலைமையின் கீழும் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவில்லை, சோனியா காந்தியின் தலைமையின் கீழும் அதில் எந்த முன்னேற்றமும் செய்யவில்லை. நேரு, ராஜீவ் காந்தி காலத்திலும் கூட பெண்களுக்கு இடஒதுக்கீடு இல்லை” என்று தெரிவித்திருக்கிறார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *