இரண்டு ஆண்டுகள் இழுபறிக்குப் பிறகு, மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது தி.மு.க அரசு. பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ம் தேதி காஞ்சிபுரம், பச்சையப்பன் ஆடவர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், 1,06,50,000 மகளிர் பயன்பெறும் வகையில் மகளிருக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
அதற்கு முந்தைய நாளே கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் ரூ.1,000 தொகை பலருக்கும் வங்கிக் கணக்கில் வரவுவைக்கப்பட்டு, அதற்கான குறுஞ்செய்திகளும் வந்தவண்ணம் இருந்தன. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இருக்கும் தகுதிவாய்ந்த குடும்பத்தலைவிகளுக்கு வங்கிகள் மூலமும், வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு மணி ஆர்டர் மூலமும் வரவுவைக்கப்பட்டது.

`மோடி… ஏழை மக்கள் பணத்தை எடுத்துடாதீங்க!” – சபாநாயகர் அப்பாவு
அதேபோல திருநெல்வேலி மாவட்டத்தில் இந்தத் திட்டத்தைத் தொடங்கிவைத்த சபாநாயகர் அப்பாவு, “கிராமப்புரத்தில் 500 முதல் 1,000 வரையும், நகரங்களில் 2,000 முதல் 5,000 வரையிலும் , மெட்ரோபாலிடன் சிட்டிகளில் 3000 முதல் 10,000 வரை என வங்கிக்கு வங்கி குறைந்தப்பட்ச வைப்புத்தொகையாக மினிமம் பேலன்ஸ்களில் வேறுபாடுகள் இருக்கும். அதைக் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். அப்படி குறைவாக வைப்புத்தொகை வைக்கப்பட்டிருந்தால் அபராதம் விதிக்கப்படும். இது குறித்து கடந்த 08.08.23-ல் நாடாளுமன்றத்தில் நிதி இணையமைச்சர் கூறும்போது 21 ஆயிரம் கோடி ரூபாய் இந்த வகையில் அபராதமாக வசூலிக்கப்பட்டிருக்கிறது என்றார். அதேபோல ஏ.டி.எம்-ஐ அதிகமான முறை பயன்படுத்தியதற்காக 8 ஆயிரம் கோடி ரூபாய் அபராதமாக இந்தியா முழுவதும் அபராதத்தொகை வசூல் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல, குறுஞ்செய்தி அனுப்பியதற்காக 6 ஆயிரத்தும் 500 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டிருக்கிறது.