இன்று தமிழக சட்டப்பேரவையில், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் 50,000 பேர் தேர்வெழுதாமல்போனது தொடர்பாக சி.பி.எம் உள்ளிட்ட தி.மு.க கூட்டணிக் கட்சிகள், அ.தி.மு.க சார்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதன் பிறகு பட்ஜெட் விவாதம், யார் ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை சிறப்பாகச் செயல்பட்டது என்னும் விவாதமாக திசை மாறியது. அப்போது பேசிய அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி, “ 35 ஆண்டுக்கால அ.தி.மு.க ஆட்சியில்தான் பள்ளிக்கல்வித்துறை சிறப்பாகப் பணியாற்றி, பெரும் வளர்ச்சியைச் சந்தித்தது” என்றார். அப்போது பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “பா.ஜ.க அரசு சார்பாகக் கொண்டுவந்த ஜி.எஸ்.டி வருவாயால் மாநில அரசுக்கு எந்த லாபமும் இல்லை. கடந்த ஆண்டு வரியை முற்றிலுமாக நிறுத்தியது. இதனால், இருக்கிற நிதியில் பட்ஜெட்டில் சரியான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, பள்ளிக்கல்வித்துறைக்கு அதிகமான நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது” என்றார்.

சட்டப்பேரவையில் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

அப்போது பேச மீண்டும் எழுந்த கே.பி.முனுசாமி, “உணர்ச்சிபூர்வமாகப் பேசும்போது தடுத்து நிறுத்தாதீர்கள். நாம் இருவரும் சண்டைபோட வேண்டும். நமக்குள்தான் சண்டை இருக்க வேண்டும். அப்போதுதான் எங்கள் இடத்துக்கு நீங்கள் வர முடியும். உங்கள் இடத்துக்கு நாங்கள் வர முடியும். இடையில் யாரும் இருக்கக் கூடாது” என்றார்.

ஒரு பக்கம் கே.பி.முனுசாமி இவ்வாறு பேச, பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானதிக்கும் அமைச்சர்களுக்குமிடையில் காரசார விவாதம் நடந்தது. பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், ”கோவை விமான நிலையத்துக்குத் தேவையான நிலம் கையகப்படுத்தும் பணியைத் துரிதமாக மேற்கொள்ள வேண்டும். கோவை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாகத் தரம் உயர்த்த வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

கே.பி.முனுசாமி

அதற்கு பதிலளித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ”விமான நிலையத்துக்குத் தேவையான நிலம் குறித்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி 85 சதவிகிதம் முடிவடைந்திருக்கிறது. சர்வதேச விமான நிலைய அங்கீகாரம் கொடுக்கும் உரிமை மத்திய அரசிடம்தான் இருக்கிறது. அதற்கான உரிமையை மத்திய பா.ஜ.க-விடம், தமிழக பா.ஜ.க-வின் சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்டுப் பெற வேண்டும்” என கிண்டலாகத் தெரிவித்தார்.

மீண்டும் பேசிய வானதி சீனிவாசன், “கோவையிலுள்ள சாலைகளைச் சீரமைத்துத் தர வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு பதிலளித்துப் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “சாலைகளை மேம்படுத்த 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, முதற்கட்டமாக ரூ.90 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன” என்றார்.

வானதி சீனிவாசன்

தொடர்ந்து பேசிய வானதி சீனிவாசன், “டாஸ்மாக் கடைகளில் மது வாங்குவதற்கு ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும். அப்போதுதான் மது அதிகம் குடிப்பவர்கள் யாரென்று தெரியும். எனவே, மது வாங்கிக் குடிப்பவர்களின்‌ குடும்பத்திலுள்ள மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்பட வேண்டும். அதற்கு அரசு முன்வர வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

அதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ”தமிழகத்தில் டாஸ்மாக் வருமானம் மூலம் நிர்வாகம் நடைபெறுவதாகத் தவறான தகவல் பரப்பப்படுகிறது. பா.ஜ.க ஆளுகிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, டாஸ்மாக் மூலம் கிடைக்கிற வருமானம் தமிழகத்தில் குறைவுதான். டாஸ்மாக்கில் மதுபான விற்பனை‌ அதிகமாகவில்லை. விலை உயர்த்தப்பட்டதால் வருமானம் அதிகரித்திருக்கிறது” என்றார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *