சென்னை: குடிபோதையில் வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாமல் உள்ள 8,912 வழக்குகள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியை சென்னை காவல் துறை தொடங்கியுள்ளது.

இது குறித்து சென்னை காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னை பெருநகர காவல்துறை விபத்துகளை குறைக்கும் வண்ணம் மோட்டர் வாகனச் சட்டத்தை திறம்பட அமலாக்கம் செய்து சாலை போக்குவரத்து விபத்துகளைக் குறைத்து வருகிறது. குடிபோதையில் வாகனம் ஓட்டி உயிரிழப்புகள் அதிகமாவது முக்கிய காரணங்களில் ஒன்றாகும். எனவே குடிபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு சட்டத்தில் கடுமையான தடுப்பு நடவடிக்கையாக தண்டனை வழங்கப்படுகிறது.

அபராதத் தொகை ரூ.10,000/- அதிகமாக இருப்பதால் பலர் அபராதத்தைச் செலுத்துவதில்லை, மேலும் நீதிமன்றத்தில் உள்ள மெய்நிகர் பிரிவிலிருந்து தொலைபேசி எண்களுக்கு அழைப்புகள் வந்தாலும் அபராதம் செலுத்துவதில்லை. மேலும் 8,912 குடிபோதை வழக்குகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளன. எனவே இதுபோன்ற விதிமீறுபவர்களுக்கு நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து சென்னை பெருநகரில் 10 இடங்களில் அமைந்துள்ள அழைப்பு மையங்கள் (Call centers) மூலம் தகவல் தெரிவித்து, கடந்த சனிக்கிழமையன்று (ஜன.21) அவர்களை வரவழைத்து வழக்குகளை முடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன் விளைவாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையின் அழைப்பு மையங்களின் அழைப்பை ஏற்று 194 பேர் ஆஜராகி அவர்களது நிலுவை வழக்குகளை இணையதளம் மூலம் செலுத்தினார்கள். மேலும் பலர் அழைப்பு மையங்களுக்கு வெளியில் பணம் செலுத்தியதால், அவர்கள் வேறுவிதமாக அபராதம் செலுத்தியிருந்தாலும், அழைப்பு மையங்களின் உதவியுடன் முடிந்த வழக்குகளின் விவரங்களையும் அபராதத் தொகையையும், இந்த அழைப்பு மையங்களில் இருந்து சேகரித்தனர். இந்த தொடர் நடவடிக்கையின் மூலம் 10 அழைப்பு மையங்களில் 425 வழக்குகள் தீர்வு காணப்பட்டு அபராதத் தொகையாக Rs.43,96,500/ செலுத்தப்பட்டன.

இந்த தொடர் நடவடிக்கையின் மூலம் நிலுவையில் உள்ள குடிபோதை வழக்குகளை தீர்வு காண்பதற்காக போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிராக செயல்படுபவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களின் சம்பந்தப்பட்ட வாகனம் மட்டுமின்றி, வேறு எந்த வாகனங்களாக இருந்தாலும், அசையும் சொத்துக்கள் உட்பட பறிமுதல் செய்ய நீதிமன்ற ஆணை பிறப்பிக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

ஏற்கெனவே இதுபோன்று குடிபோதையில் வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களின் அசையும் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு இதுவரை 263 நீதிமன்ற ஆணை பிறப்பிக்கப்பட்டு அவை நடைமுறைப்படுத்த செயல்பாட்டில் உள்ளன என்று தெரியப்படுத்திக் கொள்கிறோம்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *