சண்டிகர்:

பிரதமர் மோடியின் பாதுகாப்பில் குளறுபடி நிகழ்ந்துவிட்டதாக நாடகமாடி பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸ் அரசை டிஸ்மிஸ் செய்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த சதி நடப்பதாக அம்மாநில முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி குற்றம்சாட்டியுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்றார் பிரதமர் மோடி. ஆனால் பிரதமர் மோடி செல்லும் சாலையில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் பிரதமர் மோடியின் வாகனம் 20 நிமிடம் மேம்பாலத்தில் காத்திருந்தது.

மோடி நிகழ்ச்சிகள் ரத்து

பின்னர் பிரதமர் மோடியின் அனைத்து பஞ்சாப் நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. அப்போது நான் உயிருடன் திரும்பிவிட்டேன் என உங்கள் முதல்வரிடம் சொல்லுங்க என பஞ்சாப் அதிகாரிகளிடம் பிரதமர் மோடி கூறினார் என தகவல்கள் வெளியாகின. இந்த சம்பவங்கள் தொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கவலை தெரிவித்திருந்தார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடியும் நேரில் சந்தித்து விளக்கம் அளித்திருந்தார்.

பஞ்சாப் அரசு அறிக்கை தாக்கல்

இச்சம்பவம் தொடர்பாக பஞ்சாப் அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டிருந்தது. இதனையடுத்து பஞ்சாப் அரசும் மத்திய அரசிடம் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. மேலும் பிரதமர் மோடியின் பாதுகாப்பில் குளறுபடிகள் நிகழ்ந்தது தொடர்பாக விசாரிக்க 3 அதிகாரிகள் கொண்ட குழுவையும் மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்துள்ளது.

பஞ்சாப் அரசை டிஸ்மிஸ் செய்ய கோரிக்கை

இதனிடையே பஞ்சாப் அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் அம்மாநில முன்னாள் முதல்வர் அமரீந்தர்சிங் முதன் முதலாக குரல் எழுப்பினார். இதனைத் தொடர்ந்து கோவா ஆளுநர் ஶ்ரீதரன் பிள்ளையை நேரில் சந்தித்த அம்மாநில முதல்வர் பிரமோத் சாவத், பஞ்சாப் அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு எழுதிய கடிதத்தை வழங்கியிருந்தார். மேலும் பஞ்சாப் அரசை டிஸ்மிஸ் செய்ய கோரி பல பகுதிகளில் பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சதி நடப்பதாக சரண்ஜித் சிங் சன்னி விமர்சனம்

இந்நிலையில், பிரதமர் மோடி தமது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்பதும் மோடியின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் குளறுபடி நிகழ்ந்துவிட்டதாகவும் கூறுவதும் மிகவும் மலிவான ஒருநாடகம். பஞ்சாப் மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்கு சதித் திட்டம் தீட்டியுள்ளனர் என்று அம்மாநில முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி குற்றம்சாட்டியுள்ளார். மேலும் பிரதமர் மோடி பங்கேற்க இருந்த பொதுக்கூட்டத்துக்கு கூட்டம் கூடாத நிலையில் இப்படியான நாடகத்தை நடத்தி வருகின்றனர் எனவும் அவர் விமர்சித்துள்ளார். அரசியல் லாபங்களுக்காக பஞ்சாப் மக்களை பிரதமர் மோடி அவமானப்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்றும் சரண்ஜித்சிங் சன்னி வலியுறுத்தி உள்ளார். இதனிடையே பஞ்சாப் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த சிரோமணி அகாலிதளம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *