உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு… திருமண நிகழ்ச்சிகளில் 200 பேருக்கு மட்டுமே அனுமதி.
போபால்:
மத்தியப் பிரதேசத்தில் ஓமிக்ரான் பரவாத நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பு 350ஐ தாண்டி தொடர்ந்து அதிகரித்து வருவதால் பல்வேறு மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டிலேயே மராட்டிய மாநிலத்திலும் அதனை தொடர்ந்து டெல்லி மாநிலத்திலும் ஓமிக்ரான் பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. இந்த நிலையில், இதுவரை ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்படாத மத்திய பிரதேசத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரவு ஊரடங்கு நேற்று அமலுக்கு வந்தது.
இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும் என மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். அப்போது பொது மக்கள் வெளியில் வரக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல், உத்தரப் பிரதேசத்திலும் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் இதுவரை 2 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அம்மாநிலத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் திருமண நிகழ்ச்சிகளில் 200 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக ஓமிக்ரான் பரவலை தடுக்க தேர்தல் பொதுக் கூட்டங்கள், பேரணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours