Loading

சென்னை :

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினிக்கு பரோல் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. நளினிக்கு பரோல் வழங்க உத்தரவிடுமாறு தாய் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு இந்த பதிலை தெரிவித்துள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்ட தன்னை கவனித்துக்கொள்ள மகள் நளினிக்கு பரோல் வழங்குமாறு ஏற்கனவே தாய் பத்மா தமிழக உள்துறை செயலாளருக்கு மனு அளித்திருந்தார்.

30 ஆண்டுகள் சிறையில் இருக்கும் 7 பேர்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். மேலும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய 2018-ம் ஆண்டு செப்டம்பர் 9-ந் தேதி தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்திருந்தது. ஆனால் தீர்மானத்தின் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காத நிலையில், அமைச்சரவை தீர்மானத்தின் மீதான ஆளுநரின் நிலைப்பாடு குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. அதேசமயம் தீர்மானத்தின் மீது ஆளுநர் உரிய காலத்தில் முடிவெடுக்க வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தி இருந்தது.

நளினிக்கு பரோல் கேட்டு தாயார் மனு

இந்நிலையில் நளினியின் தாயார் பத்மா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில் தனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தன்னை கவனித்துக் கொள்ள யாரும் இல்லை என்றும் மகள் நளினியை ஒரு மாதம் பரோலில் விடுவிக்குமாறும் கோரியிருந்தார். மேலும் இது தொடர்பாக ஏற்கனவே தமிழக உள்துறை செயலாளருக்கு மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மனு அளித்தும் அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ள பத்மா, அதனால் தற்போது நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் கடந்த 2018ல் நளினி உள்ளிட்ட 7 பேரை விடுவிக்குமாறு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுனரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதுவும் நிலுவையில் உள்ளதையும் குறிப்பிட்டுள்ளார். எனவே மகள் நளினியை பரோலில் விடுவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடுமாறு தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

வழக்கு ஒத்திவைப்பு

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, நளினியின் தாயார் பத்மா தமிழக உள்துறைக்கு அனுப்பிய மனுக்கள் பரிசீலனையில் உள்ளதாகவும், மனு மீதான தற்போதைய நிலையை தெரிவிக்க அவகாசம் வழங்குமாறும் கேட்டுக்கொண்டார். அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் டிசம்பர் 23ம் தேதிக்குள் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு பதில் தருமாறு கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.

முன்கூட்டியே விடுவிக்க ஏற்கனவே மனு

இதனிடையே தம்மை முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு ஆயுள் தண்டனை கைதியான நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழக ஆளுநர் ஒப்புதல் இல்லாமல் தங்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடுமாறு தனது மனுவில் நளினி தெரிவித்திருந்தார். மேலும் 2000ம் ஆண்டு தங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. அதன் பின்னர் 10 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த 3,800 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதையும் தனது மனுவில் நினைவு கூர்ந்தார். அந்த மனுவும் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *