புதுடெல்லி:

வேளாண் சட்டங்களை எதிர்த்து நடத்தப்படும் போராட்டத்தின் ஓராண்டு நிறைவு விழாவை டெல்லி எல்லையில் விவசாயிகள் திருவிழா போல் கொண்டாடினர். ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி டெல்லியின் சிங்கு, திக்ரி, காஜிப்பூர் எல்லைகளில் போராட்டத்தை தொடங்கினர். இதன் பலனாக, 3 சட்டங்களையும் ரத்து செய்வதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், விவசாயிகள் போராட்டம் நேற்றுடன் ஓராண்டு நிறைவு செய்தது. இந்நாளை டெல்லியில் போராட்ட களத்தில் விவசாயிகள் நேற்று திருவிழா போல கொண்டாடி மகிழ்ந்தனர். உபி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து காஜிப்பூர் எல்லைக்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் வந்து குவிந்தனர். சிங்கு எல்லையில் டிராக்டர்கள் அலங்கரிக்கப்பட்டு, பஞ்சாபி பாடல்கள் ஒலிக்கப்பட்டு விவசாயிகள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

இதற்கிடையே, வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டாலும், விவசாயிகள் 6 புதிய கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். அவர்களின் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக இன்று நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. மூட்டை மூட்டையாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து டெல்லிக்கு நேற்று டிராக்டரில் வந்த விவசாயிகள், காய்கறி, கோதுமை மாவு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை மூட்டை மூட்டையாக கொண்டு வந்தனர். டெல்லியில் பல நாட்கள் தங்குவதற்கு தயார்நிலையில் வந்திருப்பதாக அவர்கள் கூறினர். இதன் மூலம், விவசாயிகள் டெல்லி எல்லையில் மேலும் பல நாட்களுக்கு போராட்டத்தை தொடர ஆயத்தமாகி வருவதை உறுதி செய்துள்ளனர்.

 

பாஜ அரசின் அராஜகத்தை நினைவு கூறும்

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது டிவிட்டர் பதிவில், ‘விவசாயிகளின் அசைக்க முடியாத சத்தியாகிரக போராட்டம், 700 விவசாயிகளின் உயிர் தியாகத்துடன், பாஜ அரசின் அராஜகத்தை எதிர்த்து ஓராண்டை நிறைவு செய்துள்ளது. விவசாயிகள் போராட்டத்தின் வெற்றி, பாஜ அரசின் அராஜகத்தை நினைவுகூறும்,’ என கூறியுள்ளார்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *