ஜெருசலேம்: ஈரான் தாக்குதலைக் கண்டித்து இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது. ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. அதோடு கிட்டத்தட்ட ஈரானின் அனைத்து ஏவுகணைகளையும் வீழ்த்த இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவியதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், முக்கிய தலைவர்கள் உட்பட பலர் உயிரிழந்தனர். இதனால், இஸ்ரேல் – ஈரான் இடையே போர் ஏற்படும் சூழ்நிலை உருவாகி பதற்றம் நிலவி வருகிறது.

இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது.

ஏற்கனவே இஸ்ரேலிய சரக்குக் கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது. ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஜோ பைடன் கூறியிருப்பதாவது, “இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். அமெரிக்காவின் உதவியால் ஈரானின் ட்ரோன்கள், ஏவுகணைகளை இஸ்ரேல் வீழ்த்தியது. இஸ்ரேலின் பாதுகாப்புக்கு அமெரிக்காவின் இரும்புக்கவச பாதுகாப்பை உறுதிப்படுத்த நெதன்யாகுவுடன் பேசினேன்.

எங்கள் மக்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க தயங்க மாட்டோம். ஈரானின் கொடூரமான தாக்குதலுக்கு பதில் கிடைக்க நாளை, G7 தலைவர்களைச் சந்திப்பேன்” என்றார். இதனிடையே ஈரான் தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இது குறித்து, “இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் வான்வழித் தாக்குதல்களை கண்டிக்கிறேன். நாங்கள் இஸ்ரேலுடன் நிற்கிறோம். ஈரானின் நடவடிக்கைகள் பிராந்தியத்தை மேலும் சீர்குலைக்கும். தற்போதைய அமைதியை சீர்குலைக்கும்” என்று அவர் கூறினார். இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இது தொடர்பாக “ஈரானின் இந்த செயல் பதற்றத்தை தூண்டும் மற்றும் பிராந்திய அமைதியை சீர்குலைக்கும்” என்றார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *