ஓசூர்: கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் ஓசூரைச் சேர்ந்த இரு வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ள நிலையில், ஓசூரில் தேர்தல் பிரச்சாரத்தை அரசியல் கட்சித் தலைவர்கள் தவிர்த்து வந்தனர். இதற்கு அரசியல் ‘சென்டிமென்ட்’ காரணம் எனக் கூறப்படுகிறது.

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் பிரதான அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் உள்ளிட்ட 27 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர். இதில், ஓசூரைச் சேர்ந்த பிரதான கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் இருவர் களத்தில் உள்ளனர். இந்நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் ஓசூரில் தேர்தல் பிரச்சாரத்தைத் தவிர்த்து வந்தது கேள்வியை எழுப்பியுள்ளது. இது தொடர்பாக விசாரித்தபோது, அரசியல் ‘சென்டிமென்ட்’ காரணம் எனப் பரபரப்பாகக் கூறப்படும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக ஓசூர் பகுதியைச் சேர்ந்த அரசியல் விமர்சகர்கள் சிலர் கூறியது: “ஓசூரில் அத்வானி, ராஜீவ் காந்தி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளனர். அதன் பின்னர் அவர்கள் அரசியல் வாழ்க்கையில் நீடிக்கவில்லை, இது ஓர் அரசியல் ‘சென்டிமென்டாக’ கருதப்படுகிறது.

கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது, திமுக தலைவர் ஸ்டாலின் ஓசூரில் பிரச்சாரம் செய்யத் திட்டமிடப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் சூளகிரியில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார். அந்தத் தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி ஓசூரில் பிரச்சாரம் செய்தார். அவரால் ஆட்சிக்கு வரமுடியவில்லை.

மேலும், நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்காக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பர்கூரில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார். நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கிருஷ்ணகிரியில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிருஷ்ணகிரியில் பிரச்சாரம் செய்தார். இவர்களை தொடர்ந்து மத்திய அமைச்சர் இன்று கிருஷ்ணகிரியில் தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.

இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் பிரம்மா, விஷ்ணு, சிவன் கோயில்கள் ஒரே நேர்க்கோட்டில் ஓசூரில் மலை மீது உள்ளது. இதன் தாக்கம் அரசியல் தலைவர்களுக்கு ஆகாது எனப் பலர் கூறுகின்றனர். தஞ்சை பெரிய கோயிலுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் செல்ல மாட்டார்கள்.

அதேபோல, கொல்லிமலையில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு அரசியல் தலைவர் மற்றும் ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் மாலை அணிவிக்க மாட்டார்கள். அதுபோலத்தான், அரசியல் கட்சித் தலைவர்கள் ஓசூரில் பிரச்சாரம் செய்வதைத் தவிர்த்து வருகின்றார்கள்” என தெரிவித்தனர்.

இது தொடர்பாக மூத்த அரசியல்வாதிகள் சிலர் கூறியது: “அரசியல் பிரபலங்கள் ஓசூருக்கு வந்து சென்றால், அதோடு அவர்களது அரசியல் வாழ்க்கை முடிந்து விடும் என ஒருநேரத்தில் என்டி ராமராவ் வந்து சென்றபோது பேசப்பட்டது. மேலும், ஓசூரைச் சேர்ந்தவர்கள் மக்களவைத் தேர்தலில் இதுவரை வெற்றி பெற்றதில்லை. குறிப்பாக ஓசூரைச் சேர்ந்த டி.ஆர்.ராஜாராம் நாயுடு, நஞ்ஜேகவுடா, சின்னபில்லப்பா ஆகியோர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தனர்.

தற்போது, ஓசூரைச் சேர்ந்த இருவர் போட்டியிடுகின்றனர். நிச்சயமாக இம்முறை ஓசூரைச் சேர்ந்த வேட்பாளர் வெற்றி பெற்று ஓசூரை மையமாக வைத்து அரசியல் தலைவர்களிடம் நிலவும் அரசியல் ‘சென்டிமென்டை’ மாற்ற வாய்ப்புள்ளது” என அவர்கள் தெரிவித்தனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *