நாடாளுமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெறவிருக்கிறது. புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டின் 40 தொகுதிகளுக்கும் இந்த முதற்கட்ட வாக்குப்பதிவிலேயே வாக்குப்பதிவு நடக்கவிருக்கிறது. இந்த நிலையில், கோவை அவிநாசி சாலையிலுள்ள தி.மு.க தேர்தல் பணிமனையில், கோவை மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை, தி.மு.க வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலையில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா இன்று வெளியிட்டார்.

டி.ஆர்.பி ராஜா – கோவை வேட்பாளர் கணபதி ராஜ்குமார்

அதில், கோவையின் நீர்நிலைகள் மாசடைவதைத் தடுத்தல், சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைத்தல், விமான நிலைய விரிவாக்கம், மெட்ரோ ரயில் திட்டம், சிறுவாணி, பில்லூர் அணைகள் தூர்வாருவதற்கான நடவடிக்கை, குறுந்தொழில்களுக்கு புதிய தொழில் பூங்கா அமைத்தல், ஜி.எஸ்.டி பிரச்னைகள், நியாய விலை கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்குதல் குறித்தான வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தன.

தேர்தல் அறிக்கை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, “நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல், தேர்தல் அல்ல, போர். இந்த போரில் நாங்கள் மகத்தான வெற்றி பெறுவோம். தி.மு.க-வின் அற்புதமான களப்பணியால் கணபதி ராஜ்குமாரின் வெற்றி உறுதியாகியிருக்கிறது. பல்வேறு மக்களின் கருத்துகளைக் கேட்டு அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும், கோவைக்கென்று தனித்துவமாகவும் நாங்கள் தேர்தல் அறிக்கையைத் தயாரித்திருக்கிறோம். தி.மு.க தேர்தல் அறிக்கைமீது மக்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. இதற்குமுன் அறிவித்த 90 சதவிகித வாக்குறுதிகளை தி.மு.க அரசு நிறைவேற்றியிருக்கிறது. ’சிங்காரச் சென்னை’, ‘மின்னும் மன்னை’ என்று நாங்கள் ஒவ்வொரு நகரத்துக்கும் தனித்தனியாகக் கொள்கை வகுத்துச் செயல்பட்டோம். அதுபோலவே கோவைக்கும் ‘கோவை ரைசிங்’ என்ற பெயரில் கொள்கை வகுத்திருக்கிறோம்.

டி.ஆர்.பி ராஜா – கோவை வேட்பாளர் கணபதி ராஜ்குமார்

சிறு, குறு தொழில்களுக்கு ஜி.எஸ்.டி-யால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அவர்களுக்கும் சேர்த்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறோம். பா.ஜ.க ஆட்சிக்கு வந்து 3,500 நாட்களுக்கு மேலாகி விட்டது. இத்தனை நாள்களில் செய்யாததை 500 நாட்களில் செய்வோம் என்கிறார்கள். இது எந்த வகையில் நியாயம்… இப்படிச் சொல்வதற்கு பா.ஜ.க-வுக்கு எந்தத் தகுதியும் இல்லை. பா.ஜ.க சொன்னதைச் செய்ததாகச் சரித்திரம் இல்லை. எனவே, அவர்கள் நிச்சயமாக அதைச் செய்யமாட்டார்கள். மத்திய அரசின் நிதி எங்கே செல்கிறது எனத் தெரியவில்லை என்று அண்ணாமலை சொல்கிறார்.

கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை

ஒட்டுமொத்த மக்கள் என்ன சாப்பிடுகிறார்கள், உடுத்துகிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பது வரை ஒட்டுக்கேட்கத் தெரிந்தவர்களுக்கு, தொகுதிக்கு ஒதுக்கிய நிதி எங்கே செல்கிறது எனத் தெரியவில்லை என்று சொல்வது முட்டாள்தனமாக இருக்கிறது. அண்ணாமலை தூங்கிக்கொண்டிருக்கிறார். அவரை எழுந்துகொள்ளச் சொல்லுங்கள். நாங்கள்‌ மீண்டும்‌ மீண்டும் சொல்வது ஒன்றுதான். போட்டி எங்களுக்கும் அ.தி.மு.க-வுக்கும்தான். ஆனால், ஊடகங்கள் அவர்களை ஏன் இருட்டடிப்புச் செய்கின்றன என்று தெரியவில்லை. இப்போது வருகின்ற கருத்துக்கணிப்புகளைப் பார்த்தால் சிரிப்பு வருகிறது. எந்த கருத்துக்கணிப்பு உண்மை, எது பொய் என்பதே தெரியவில்லை. கணபதி ராஜ்குமார் மகத்தான வெற்றி பெறுவார். கோவையில் தி.மு.க வரலாறு காணாத வெற்றி பெறும். 100 சதவிகித வெற்றி எங்களுக்குத்தான்” என்றார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *