சென்னை:

திமுக இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து திமுக தலைவருக்கு உதயநிதி நன்றி தெரிவித்துள்ளார்.

ரெட் ஜெயன்ட் நிறுவனம் மூலம் சினிமாக்களை தயாரித்தும், வெளியிட்டும்வருபவர் உதயநிதி ஸ்டாலின். பாரம்பரிய அரசியல் குடும்பத்தில் பிறந்ததால் உதயநிதியின் அரசியல் எண்ட்ரி எப்போது என்றே திமுகவினரின் கேள்வி இருந்தது.

அவர்களது கேள்விக்கு பதில் கிடைக்கும் விதமாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு (2019) திமுகவின் இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

அதனையடுத்து கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் எம்.எல்.ஏவாகவும் தேர்வானார். இதற்கிடையே அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டுமென்ற கோரிக்கையும் கட்சிக்குள் எழுந்திருக்கிறது.

இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் பொறுப்பு வழங்கியதற்கு அக்கட்சியின் தலைவருக்கு உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பெருமையும்-கடமையும் நிறைந்த திமுக இளைஞரணி செயலாளராக மூன்றாண்டுகளை நிறைவு செய்து, இன்று 4ஆம் ஆண்டு பயணத்தை தொடங்குகிறேன். நம்பிக்கை வைத்து பெரும் பொறுப்பை வழங்கிய நம் அறிவாலயத்துக்கும், தலைவர் மு.க. ஸ்டாலினுக்கும், பொதுச்செயலாளருக்கும், தலைமை-மாவட்ட கழக நிர்வாகிகளுக்கு நன்றி.

உடன் உழைக்கும் இளைஞரணியினர்-உடன்பிறப்புகள்-செல்லும் திசையெங்கும் தங்கள் வீட்டில் ஒருவனாக நினைத்து என்னிடம் அன்பு பாராட்டும் பொதுமக்கள் அனைவருக்கும் அன்பும் நன்றியும். சமூகநீதியை நிலைநிறுத்த, கழகத்தை வளர்த்தெடுக்க பெரியார்-அண்ணா-கலைஞர்-பேராசிரியர் வழியில் தொடர்ந்து உழைத்திடுவோம்” என குறிப்பிட்டுள்ளார்.

                                                                                                                          – க. விக்ரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *