திருப்பூர்: 17 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்து பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் வேலூரைச் சேர்ந்த இளைஞருக்கு சிறை தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி ( 25). இவர் அப்பகுதியில் டெய்லராக வேலை செய்து வந்துள்ளார். செல்போனில் ஆன்லைன் விளையாட்டு விளையாடும்போது திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் செல்போனில் பேசிப் பழகி வந்துள்ளனர.
இந்தநிலையில் தட்சிணாமூர்த்தி, சிறுமியை நேரில் சந்திக்க வருமாறு கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிறுமி திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்துக்கு வந்துள்ளார். ராணிப்பேட்டையில் இருந்து சிறுமியை பார்ப்பதற்காக தட்சிணாமூர்த்தியும் திருப்பூர் வந்துள்ளார். இருவரும் சந்தித்து பேசியுள்ளனர். அதன்பிறகு ஆசை வார்த்தை கூறி, சிறுமியை தட்சிணாமூர்த்தி தன்னோடு சொந்த ஊருக்கு அழைத்துச்சென்றுள்ளார். அங்கு திருமணம் செய்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இந்தநிலையில் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் குண்டடம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தட்சிணாமூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சிறுமியை மீட்டனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்றிரவு (ஆக.29) இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.
சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த குற்றத்துக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம், திருமணம் செய்யும் நோக்கத்தில் சிறுமியை ஏமாற்றி சொந்த ஊருக்கு கடத்திச்சென்ற குற்றத்துக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம், குழந்தை திருமண செய்த குற்றத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும், இதை ஏக காலத்தில் தட்சிணாமூர்த்தி அனுபவிக்க நீதிபதி ஸ்ரீதர் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார். இதையடுத்து தட்சிணாமூர்த்தி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.