பட்டாசாக வெடிக்கும் அரசியல் நையாண்டி வசனங்கள்
பிரதான பாத்திரங்களைத் தாண்டி படத்தில் வரும் சின்ன சின்ன கேரக்ட்டர்களும் பார்வையாளர்களின் மனதில் ஆழமாகப் பதிந்துவிடும் மாயத்தை பாலசந்தர் எப்போதும் நிகழ்த்துவார். இந்தப் படத்தில் ‘டெல்லி நாயக்கர்’ என்றொரு கேரக்ட்டர் வருகிறது. காரசாரமான அரசியல் விமர்சனங்களை, நையாண்டியான மொழியில் சொல்லி விட்டு ‘நமக்கு எதுக்குப்பா பொல்லாப்பு?’ என்கிற பாவனையுடன் பிறகு விலகிச் சென்று விடும். டெல்லி நாயக்கர் வரும் காட்சிகள் எல்லாம் ரகளையான அரசியல் கிண்டல்கள் வசனங்களாகவும், காட்சிகளாகவும் வெளிப்படுகின்றன. ‘அரசியல் ஞானி அடுத்த தலைமுறையைப் பத்தி கவலைப்படுவான், அரசியல்வாதி அடுத்த தேர்தலைப் பத்தி மட்டும்தான் கவலைப்படுவான்’ என்பது போன்ற ‘சுளீர்’ வசனங்கள் படம் முழுவதும் தெறித்துக் கொண்டே இருக்கின்றன. பொங்கி வழியும் நரைத்த முடி, பெரிய மீசை, ஜிப்பா, சோடா புட்டி கண்ணாடி என்று அறிவுஜீவியாக வலம்வரும் இந்தப் பாத்திரத்தை பிரபாகர் சிறப்பாகக் கையாண்டுள்ளார்.
இன்னொரு சுவாரஸ்யமான கேரக்ட்டர் ‘சுதந்திரம்’. ஆம், இந்தப் பாத்திரத்தின் பெயர் அது. இப்படியொரு வில்லங்கமான பெயரை ஒரு பாத்திரத்திற்குச் சூட்டி விட்டு அதை வைத்து படம் முழுவதும் ரகளையாகக் கிண்டடிலத்திருக்கிறார்கள். உயரம் குறைவான இந்தப் பாத்திரத்தைச் சுட்டிக் காட்டி, “சுதந்திரம்… நீ இன்னமும் வளரவேயில்லையே?” என்று நாட்டு நிலைமையைச் சூசகமாகச் சுட்டிக் காட்டுவார் டெல்லி நாயக்கர். வீரைய்யா என்கிற நடிகர் இந்தப் பாத்திரத்தைச் சுவாரஸ்யமாகக் கையாண்டுள்ளார். சமகால அரசியல் கொடுமைகளைக் கண்டு மனம் வருந்தும் சுதந்திரப் போராட்ட தியாகியாக வைரம் கிருஷ்ணமூர்த்தி சிறப்பாக நடித்துள்ளார்.
+ There are no comments
Add yours