அர்ச்சனா மற்றும் ஜோவிகாவின் அழுகை, தினேஷ் மற்றும் மாயாவின் வீம்பு, விஷ்ணுவின் அழிச்சாட்டியம், நிக்சனின் கேப்டன்ஸி போராட்டம், விக்ரமின் சங்கடம், அனன்யாவின் பரிதாபம் போன்ற உணர்ச்சிகளால் இந்த எபிசோடு ஒரு மாதிரி கலவையாக இருந்தது. ஆனால் சுவாரஸ்யமாக இருந்ததா என்றால் இல்லை. தரப்படுகிற டாஸ்க்கை வைத்துக்கூட இவர்களால் எந்தவொரு சுவாரஸ்யத்தையும் உருவாக்க முடியவில்லை.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
விஷ்ணுவின் அழிச்சாட்டியம் தாங்காமல் வெளியே வந்து தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தார் அர்ச்சனா. ‘அய்யோ.. வீக்கெண்ட் வந்துருச்சே’ என்கிற பயத்தினாலோ, என்னமோ, அர்ச்சனாவை சமாதானப்படுத்துவது போல் விஷ்ணு உள்ளிருந்து வர, “நீங்க இருக்கற இடத்துல நான் இருக்க மாட்டேன். என்னைத் தொல்லை பண்ணாதீங்க” என்று அர்ச்சனா உரத்த குரலில் கத்த, வந்த வேகத்திலேயே விஷ்ணு திரும்பிச் சென்றார்.
அனன்யாவும் பூர்ணிமாவும் கனிவாக அர்ச்சனாவிற்கு ஆறுதல் சொன்னது நல்ல காட்சி. “நான் வீட்டுக்குள் வந்தப்ப விஷ்ணுதான் எதுவா இருந்தாலும் எனக்கு ஆறுதல் சொல்லிட்டு இருந்தாரு. இப்ப கம்ப்ளீட்டா மாறிட்டாரு” என்று புலம்பினார் அர்ச்சனா. ஆம், அக்ஷயா சென்றவுடன் விஷ்ணுவிற்கு ஒரு பலியாடு தேவைப்படுகிறது. அந்த டார்கெட் அர்ச்சனா!
தினேஷ், ரவீனா, மணி, மாயா ஆகிய நால்வரும் சேர் போட்டு சண்டையை வேடிக்கை பார்த்ததைப் பற்றியும் அர்ச்சனா ஆதங்கப்பட, “இல்ல. நாங்க பூர்ணிமா பண்ண ஒரு விஷயத்துக்குத்தான் சிரிச்சோம்” என்று அவர்கள் விளக்கம் அளித்தார்கள்.
ஒருவர் அழுது டிராமா செய்கிறாரா, அல்லது உண்மையிலேயே மனம் உடைந்து அழுகிறாரா என்பதை வெளியிலிருந்து இன்னொருவர் கண்டுபிடிக்க முடியாது. எனவே அந்தச் சமயத்தில் மட்டுமாவது, சந்தேகத்தின் பலனை அவருக்கு அளித்து பொறுமையைக் கடைப்பிடிக்கலாம். கனிவாக ஆறுதல் சொல்லலாம். அல்லது சும்மாவாவது இருக்கலாம். கூடுதலாக வெறுப்பேற்றக் கூடாது. இந்த நோக்கில் தினேஷ் அளித்த கனிவான விளக்கம் சரியானது. ஆனால், “நீங்க பேசினது கண்ணாடி வழியாக எங்களுக்குக் கேட்கலை” என்றது சப்பைக்கட்டு. கண்ணாடி வழியாகப் பார்க்கும் போது சண்டை போடுபவர்களின் உடல்மொழியுமா தெரியாது?!
கண்ணீரின் போது காட்டப்பட வேண்டிய கண்ணியம்
தினேஷ் குழு வெளியில் காட்டிய கரிசனத்தைக் கூட உள்ளே இருப்பவர்கள் காட்டத் தயாராக இல்லை. “நூறு சதவிகிதம் அர்ச்சனா நடிக்கறாங்க. ஹீரோயின் ரோல்லாம் என்கிட்ட காட்டினா செஞ்சு வுட்டுறுவேன். அப்படில்லாம் என்னால நடிக்க முடியாது” என்று விசித்ராவிடம் விஷ்ணு அனத்திக் கொண்டிருக்க, ஒரு காலத்தில் அர்ச்சனாவின் பாதுகாவலாக இருந்தவரும், அதற்காக கமல் அவர்களால் பாராட்டப்பட்டவருமான விசித்ரா “ஆமாம்… அப்படித்தான் கேமராவைப் பார்த்து நடிக்கறா” என்பது மாதிரி சொல்லி சிரித்தார். ‘திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை’ என்பது போல பிக் பாஸ் வீட்டில் துணையில்லாதவர்கள் கேமரா முன்புதான் அழ முடியும். மேலும் அங்கு கேமரா இல்லாத இடம் ஏது?!
“நான் கண்டிப்பான பெற்றோரால் வளர்க்கப்பட்டவள். ஒரு சினிமாவுக்கு கூட போனதில்லை. பிரெண்ட் கூட பழக முடிஞ்சதில்லை” என்று தன்னுடைய வளர்ப்பு குறித்து அர்ச்சனா புலம்பியதில் பெற்றோர்களுக்கான பொதுச் செய்தி உள்ளது. ஒரு பறவையை அன்பு காட்டுவது வேறு. கூண்டில் அடைத்து வளர்ப்பது வேறு.
ரவீனாவிடம் சாரி கேட்ட அர்ச்சனா, சமாதான அணைப்பிற்கு அழைப்பு விடுக்க, “இருக்கட்டும். வேண்டாம்… நீங்க எப்ப கத்துவீங்கன்னு தெரிய மாட்டேங்குது. டிஸ்டன்ஸ் மெயின்டெயின் பண்ணலாம்” என்று விலகிச் சென்றார் ரவீனா. ஒருவர் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது ‘விடாத… நல்லா போடு’ என்று இன்னொருவர் வந்து கிண்டல் செய்தால் அடி வாங்குபவருக்கு கோபம் வராமலா இருக்கும்? இந்த நோக்கில் அர்ச்சனாவின் கோபம் நியாயம்தான். ரவீனாவின் விலகலில் நியாயமே இல்லை. மாயா பெரிய விஷபாட்டில் என்றால் ரவீனா அதில் சிரிப்பு பாய்சன் வகையறாவாக இருக்கிறார். ஒருவர் உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருக்கும் போது அதில் நெருப்பு கொட்டுவதன் பெயர் வேடிக்கை அல்ல. “விஷ்ணு, அர்ச்சனாவை நோண்டிட்டே இருக்கறாரு” என்று பரிதாபப்பட்டு முன்பு சொன்னவரும் இதே ரவீனாதான்.
கயிறு கட்டாத போராட்டம் – தொடரும் விதிமீறல்கள்
நாள் 61. இப்போதெல்லாம் வேக்அப் பாடல் காட்சி காட்டப்படாததால் நாள் குழப்பம் வந்து விடுகிறது. கயிறு டாஸ்க்கில் விசித்ரா – சுரேஷ் ஜோடி மட்டும்தான் விதியை ஒரு மாதிரியாகப் பின்பற்றுகிறது. மற்ற இரு ஜோடிகளும் செய்யவில்லை.
‘விஷ்ணு கூட டாஸ்க் செய்ய மாட்டேன்’ என்று அர்ச்சனா கோபித்து விலகிவிட்டார். மூன்றாவது ஜோடியிலும் பிரச்னை. ‘தூங்கப் போகிறேன்’ என்று கயிற்றை அவிழ்த்துச் சென்ற மாயா, அப்படிச் செய்யாமல் பூர்ணிமாவிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார் போல! இதனால் டென்ஷன் ஆன தினேஷ், விடியற்காலையிலேயே எழுந்து மாயாவிடம் கயிறு கட்டுவதற்கு அழைக்க இருவருக்குள்ளும் முட்டிக்கொண்டது. எனவே கயிறு கட்டாமல் விலகியிருந்தார்கள்.
“ரூல்ஸ் பிரேக் பண்ணாதீங்க. பாயின்ட் பேசும் தினேஷ் அவர்களே” என்று விசித்ரா கிண்டல் செய்ய பதிலுக்கு ‘ஒழுங்கு’ காட்டினார் தினேஷ். இப்படி இவர்கள் கன்னாபின்னாவென்று விதிமீறல் செய்ததால் ‘அடுப்பை அணைத்து’ பதிலுக்கு விளையாடினார் பிக் பாஸ். ஆனால் நிக்சன் சொல்வதைப் போல ‘அடுப்பை அணைக்கும் தண்டனை’ போர் அடிக்கிறது. சுவாரஸ்யமான தண்டனையை பிக் பாஸ் டீம் யோசிக்கலாம்.
ஆக, காலை காஃபி, டீயில் கை வைத்து விட்டார் பிக் பாஸ். மக்களுக்குப் பசித்தால் இன்னமும் கொலைவெறி ஆகிவிடுவார்களே என்று பயந்தோ, என்னமோ, ஒவ்வொருவரிடமாக சென்று சமாதானக் கொடியை பறக்க விட முயன்றார் நிக்சன். “விஷ்ணு என்கிட்ட சாரி கேட்கணும். என்கிட்ட ஒரு வார்த்தை கூட பேசக்கூடாது” என்கிற நிபந்தனையை அர்ச்சனா வைக்க, ‘அதெல்லாம் முடியாது” என்று வீம்பு பிடித்தார் விஷ்ணு. “நான் நாலு நாளைக்குகூட பட்டினியா இருப்பேன்” என்று இன்னொரு பக்கம் அழிச்சாட்டியம் செய்தார் தினேஷ். தவறு செய்யாதவர்கள் கூட பசியால் அவதிப்பட வேண்டியிருக்குமே என்று இவர்கள் யோசிப்பதில்லை.
இங்கும் அங்கும் அல்லாடிய நிக்சன்
‘இது சாப்பாடு விஷயம். சாரி கேளுங்களேன்’ என்று நிக்சன் மன்றாடிக் கொண்டிருந்தார். “அடிக்கறா மாதிரி பேசறாரு. நாமதான் அவரைத் திருத்தணும்” என்று தினேஷ் குறித்து விசித்ரா சொல்ல, “அது திருந்தாத கேஸ்” என்றார் மாயா. ஒருவழியாக தினேஷை சமாதானம் செய்து அழைத்து வந்தால், அவர் சோபாவில் போய் அமர்ந்து கொண்டு ‘இங்க வரச் சொல்லுங்க’ என்று கெத்து காட்ட ‘போய்யா யோவ்’ என்று நொந்து போய் டென்ஷன் ஆனார் நிக்சன்.
விஷ்ணு – அர்ச்சனா சமாதான உடன்படிக்கை ஒருமாதிரியாக வெற்றியடைந்தது. எனவே அவர்களுக்குக் கயிறு கட்டப்பட்டது. அதே போல் தினேஷ் குழுவையும் இணைக்க பெரும் முயற்சி செய்தார் நிக்சன். காரியம் கைகூடுவதற்குள் மீண்டும் மோதல். ‘அடிக்கடி கழட்டிட்டு போயிடறாங்க’ என்று மாயாவின் கயிறு முடிச்சை தினேஷ் டைட் செய்ய “ஹலோ… என்னதிது நான்சென்ஸ்… என்னைத் தொட உங்களுக்கு உரிமை கிடையாது” என்று கோபத்துடன் விலகினார் மாயா. மறுபடியும் சமாதானம் செய்து அனைவரையும் ஒன்றிணைத்த நிக்சனுக்கு அமைதிப் பரிசுக்கான நோபல் விருதையே அளிக்கலாம். என்னவொன்று, “பாருங்க பிக் பாஸ். இப்படில்லாம் பண்றாங்க” என்று கண்ணைக் கசக்கிக் கொண்டு நிற்காமல் கெஞ்சியோ, மிஞ்சியோ அவராகவே சமாளித்த விதம் நன்று.
யாருக்குக் கைத்தட்டலையோ, அவரே கேப்டன்
இன்னொரு புத்தம் புதிய கலகத்தை ஆரம்பித்தார் பிக் பாஸ். கேப்டனுக்கான தேர்வு. இது கோக்குமாக்கான டாஸ்க்காக இருந்தது. ஒவ்வொருவரும் வந்து போடியத்தில் நிற்க, மற்றவர்கள் கைத்தட்டி வரவேற்க வேண்டும். யாருக்கு அதிக வரவேற்பு இருக்கிறதோ, அவர்தான் கேப்டனுக்கான போட்டியில் நிற்க தகுதியானவராம். முதலில் சுரேஷ் வந்து நின்ற போது அமோகமான வரவேற்பு இருந்தது. சுரேஷை கேப்டன் ஆக்கி அவரை ஜாலியாக வெச்சு செய்ய மக்கள் ஆசைப்பட்டார்கள் போல. தனக்குப் போதிய வரவேற்பு வராது என்பதை மாயாவே உணர்ந்திருந்தார். யார் போய் நின்றாலும் பறவை போல் பறந்து கத்திக் கொண்டிருந்தார் சுரேஷ்.
ஓரு வழியாக இந்த டாஸ்க் முடிவிற்கு வந்தது. சுரேஷ், அர்ச்சனாவிற்கு அதிக வரவேற்பு கிடைத்தது என்று நிக்சன் சொல்ல, தினேஷ் இதை ஆட்சேபித்தார். எனவே இருவருக்குள்ளும் மீண்டும் ஒரு சண்டை. தினேஷ் மணியை ஆதரிக்க முயன்றார். மீண்டும் இந்த வாக்கெடுப்பை நடத்தியதில் சுரேஷ், அர்ச்சனா, விஷ்ணு ஆகிய மூவரும் கேப்டன் பதவிக்காக மோதுவார்கள் என்கிற முடிவு கிடைத்தது. இந்த முறையும் கேப்டன் ஆக முடியாத கோபத்தை மீண்டும் அழுகையில் வெளிப்படுத்தினார் ஜோவிகா. ஆனால் சொன்ன காரணம் வேறு!
‘கேங்குன்னு சொல்லாதீங்க’ – கடுப்பில் அழுத ஜோவிகா
இந்த வாக்கெடுப்பின் மூலம் யார், யார் எந்த கேங்கில் இருக்கிறார்கள் என்று பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொண்டார்கள். மணியும் ரவீனாவும் ‘கேங். கேங்’ என்று கோணல் கோணலாக சாய்ந்து நடனம் ஆட ஜோவிகாவிற்குள் கோபம் ஏறியது. அவர் ஹைடெஸிபலில் கத்த ஆரம்பிக்க, “அவ டென்ஷன் ஆவறா. இந்தச் சமயத்துல கிண்டல் வேணாம்” என்று ரவீனாவிடம் நிக்சன் சொல்ல, “நான் அவளைப் பார்த்து கத்தல” என்றார் ரவீனா. “ஏதோ சண்டை போல. ஜோவிகா கத்தறா. போய் சமாதானம் பண்ணணும்” என்று விசித்ராவிற்குள் இருந்த தாய்மையுணர்ச்சி கன்னாபின்னாவென்று வேலை செய்ய, அவருடன் கயிற்றால் பிணைக்கப்பட்டிருந்த சுரேஷ் கூட வராமல் வீம்பு செய்தார். இதனால் ‘அசிங்கமா திட்டுவேன்’ என்று சொல்லுமளவிற்கு விசித்ராவின் கோபம் சென்றது.
ஜோவிகாவிற்குள் இருக்கிற குழந்தைமையும் கன்னாபின்னாவென்று விழித்துக் கொண்டது. “நான் எங்க அம்மா கூடயே இருக்கேன். இங்க பிடிக்கலை. நான் போறேன். கேங்கு… கேங்கு…ன்னு சொல்லி காண்டாக்கறாங்க” என்று அழுது கொண்டிருந்தார். அதில் உண்மையில்லையென்றால் கோபம் வருவதற்கோ, அழுவதற்கோ இடமில்லை. “என்னதான் நாங்க தனித்தனியா விளையாடினாலும் மணியையும் என்னையும் கேங்குன்னுதான் சொல்றாங்க. அதுக்கு என்ன பண்றது?” என்கிற ரவீனாவின் லாஜிக் சரியாக இருந்தது. ஆனால் நிக்சனோ “இருக்கறவங்களுக்கு காண்டாகாது. இல்லாதவங்களுக்கு நிச்சயம் கோபம் வரும்” என்றார்.
ஒருவழியாக ஜோவிகாவும் ரவீனாவும் சமாதானம் பேச அமர்ந்தார்கள். “கோவமா இருக்கும் போது சொல்லி வெறுப்பேத்தலாமா. நான் தனியாத்தான் ஆடறேன். கேங்கு கேங்குன்னு சொன்னா அப்படித்தான் வெளிலயும் தெரியும். நான் எதையாவது யார் கிட்டயாவது டிஸ்கஸ் பண்ணியிருக்கேனா… நான் பாட்டுக்குத் தனியாத்தான் இருக்கேன்” என்று புலம்பினார் ஜோவிகா.
‘அங்க போய் எந்தக் கூட்டணியிலும் சேரக்கூடாது. என்னை மாதிரி தனியா கெத்தா நிக்கணும். அப்பத்தான் மக்களுக்குப் பிடிக்கும்’ என்று ஜோவிகாவிடம் வனிதா கண்டிப்பாக சொல்லியனுப்பியிருக்கிறார் போலிருக்கிறது. எனவே அதை நிரூபிப்பதற்காக ஜோவிகா பாடு படுகிறார். ஆனால் கேங்கில் இல்லை என்று அவர் அனத்துவது நம்பும்படியாக இல்லை என்பதையே இத்தனை வாரக் காட்சிகள் காட்டுகின்றன. அது பற்றி யாரும் பேசக்கூடாது என்று ஜோவிகா எதிர்பார்ப்பதும் போங்காட்டம்.
விசித்ராவிற்கும் சுரேஷிற்கும் இடையே கயிறு இழுக்கும் போராட்டம் நடந்தது. சுரேஷூடனே இருப்பது குறித்து விசித்ரா சங்கடமும் கோபமும் அடைந்தார். எனவே கயிற்றைக் கழட்டி வீசினார். ‘இங்கு தொடர்ந்து விதிமீறல்கள் நடக்கின்றன’ என்று டென்ஷன் ஆன குரலில் சொன்ன பிக் பாஸ், போலீஸ் ஸ்டேஷனைக் கடந்து செல்லும் ஒருவரை உள்ளே இழுத்து திருட்டு கேஸ் போடும் அழிச்சாட்டியம் போல விசித்ராவின் கயிறுக் கூட்டணியில் நிக்சனை இழுத்து உள்ளே போட்டார். பாவம், இத்தனை நேரம் மக்களிடம் முட்டி மோதிக் கொண்டிருந்ததற்காக கேப்டனுக்குக் கிடைத்த பரிசு.
கிண்டலால் சங்கடம் அடைந்த விக்ரம் – ஆறுதல் சொன்ன அனன்யா
திடீரென்று ஒரு டீக்காரர் உள்ளே வந்து சர்ப்ரைஸ் கொடுத்தார். எல்லோருக்கும் கண்ணாடி கிளாஸில் டீ. ஓர் அந்நியரை உள்ளே பார்த்த மகிழ்ச்சியை அனைவரும் ‘அண்ணே… அண்ணே’ என்று அழைத்து வெளிப்படுத்தினார்கள். டீக்கார அண்ணனை நோக்கி யாரோ ‘ஐ லவ் யூ’ என்று கூட கத்தினார்கள். இதுவே வெளியிடம் என்றால் அந்த அண்ணனை ஈ, காக்கா கூட சட்டை செய்திருக்காது. பிக் பாஸின் குடுமி சும்மா ஆடாதே என்று பார்த்தால், பிறகு தேநீர் தொடர்பான விளம்பர டாஸ்க் நடந்தது. (அதானே?!)
விக்ரமும் அக்ஷயாவும் மாற்றி மாற்றி ‘டைட்டில் வின்னர்’ என்று சொல்லி விளையாடிய ‘நள்ளிரவு’ சம்பவத்தை மீண்டும் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தார் விஜய். விஷ்ணுவும் சுரேஷூம் இதைக் கூடுதலாக கலாய்த்துக் கொண்டிருந்தார்கள். வெளியில் அமர்ந்திருந்த விக்ரமிற்கு இது கேட்டது. “என்னைப் பத்திதான் கிண்டல் பண்றாய்ங்க” என்று சங்கடத்துடன் தலையைக் குனிந்து அவர் அமர்ந்திருந்தது பரிதாபமான காட்சியாக இருந்தது. “என்னை ஒரு ஆளாவே பார்க்க மாட்டாங்களா” என்று அவர் முனகியதில் நிறைய சோகம் தெரிந்தது. “நீ போய் கேட்க மாட்டியா” என்று இதை விசாரித்தார் அனன்யா. “இப்படியே உனக்குப் பழகிடுச்சா?” என்று கரிசனமாக கேட்ட அனன்யா, பிறகு திடீரென்று அழ ஆரம்பித்து விட்டார். ‘இந்த மாதிரி ஒருத்தரை ill treat செய்யறது தப்பு” என்று சொல்லி கண்ணீர்விட்டார் அனன்யா. இன்னொருவரின் துயரத்திற்காக ஒருவர் அழுவதற்கெல்லாம் பெரிய மனது வேண்டும்.
பிக் பாஸ் வீட்டைப் பொறுத்தவரை விக்ரம், அனன்யா, அக்ஷயா போன்றவர்கள் திறமைசாலிகளாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் பொறுமை, நிதானம், கனிவு, நியாயவுணர்ச்சி, நுண்ணுணர்வு போன்ற அடிப்படையான நாகரிகங்களைக் கடைப்பிடிப்பவர்களால்தான் உலகம் இன்னமும் இயங்கிக் கொண்டிருக்கிறது. எல்லோருமே அடாவடிக்காரர்களாக இருந்தால் காட்டுமிராண்டிக் காலத்தில்தான் அப்படியே உறைந்திருப்போம். விக்ரமும் அனன்யாவும் நல்ல ஆன்மாக்கள் என்பதை உணர்த்துகிற நல்ல காட்சியாக இது இருந்தது. ஏதோ ஒரு கணத்தின் தன்னம்பிக்கையில் ‘நான் டைட்டில் வின்னர்’ என்று விக்ரம் சொல்லி விட்டதற்காக, சீசன் முழுக்க அவரை கிண்டல் செய்வது தவறான விஷயம்.
இன்று பஞ்சாயத்து நாள். விஷ்ணுவின் அழிச்சாட்டியம், அர்ச்சனாவின் கண்ணீர், நிக்சனின் கேப்டன்ஸி போராட்டம், வீட்டில் நடந்த விதிமீறல்கள் உள்ளிட்ட பல விஷயங்கள் விசாரணைக்குக் காத்திருக்கின்றன. என்ன நடக்கிறதென்று பார்ப்போம்.
+ There are no comments
Add yours