இந்த சீசன் பிக் பாஸ் தொடக்கத்திலேயே, ஜோவிதாவின் படிப்பு சர்ச்சை, பவா செல்லதுரையின் விரக்தியான வெளியேற்றம் முதலான சில சம்பவங்கள் பரபரப்பாக அரங்கேறின.
இதையெல்லாம் கடந்து பிரதீப், விஷ்ணு, விஜய் வர்மாவின் அதிரிபுதிரி சண்டைகளுடன் விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது பிக் பாஸ் தமிழ் சீசன் 7.
கலந்து கொண்ட 18 போட்டியாளர்களில் அனன்யா முதல் வார எவிக்ஷனில் வெளியேறினார். அவரது வெளியேற்றத்திலேயே சர்ச்சை எழுந்தது நினைவிருக்கலாம். நியாயப்படி பார்த்தால், அந்த வாரம் யுகேந்திரனே வெளியேறியிருக்க வேண்டுமெனக் குரல் கொடுத்தார்கள் தொடர்ந்து பிக் பாஸ் பார்த்து வரும் ரசிகர்கள்.
தொடர்ந்து அனன்யா வெளியேறிய அடுத்த நாளே எழுத்தாளர் பவா செல்லத்துரை தன்னால் அந்த வீட்டிலிருக்க முடியாதெனக் கூறி தானாகவே வெளியேறினார். பவாவின் வெளியேற்றத்தால் இரண்டாவது வாரம் எவிக்ஷன் இல்லை என அறிவிக்கப்பட்டது. மூன்றாவது வாரமான இந்த வாரம் வெளியேற்றத்துக்காக நாமினேட் செய்யப்பட்டவர்கள் சிறிய வீட்டுக்குச் சென்றார்கள்.
மாயா, விஷ்ணு, பிரதீப், சரவண விகரம், பூர்ணிமா உள்ளிட்டோர் சிறிய வீட்டிலிருந்த நிலையில், இந்த வார எவிக்ஷனுக்கான ஷூட்டிங் இன்று காலை பிக் பாஸ் செட்டில் தொடங்கியது.
கமல் கலந்துகொண்ட இந்த ஷூட்டிங்கில் ரசிகர்களிடமிருந்து பெறப்பட்ட ஓட்டுகளின் அடிப்படையிலும், அந்த வீட்டுக்குள் நடந்து கொண்ட முறைகளையும் வைத்துக் கணக்கிட்டு போட்டியாளர் விஜய் வர்மாவை வெளியேற்றியிருக்கிறார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு வரை வெளியுலகத்துக்கு யார் என்றே தெரியாத விஜய் வர்மா உள்ளே நுழையும் போதே முதல் வார கேப்டன் என்கிற பெருமையுடன் நுழைந்தார்.
திருச்சியைச் சேர்ந்த விஜய் வர்மாவின் குடும்பம் திருச்சி, மற்றும் சென்னையில் ஜிம்கள் நடத்தி வருவதாகத் தெரிகிறது. இவர்களுடைய ஜிம்முக்கு உடற்பயிற்சி செய்ய வரும் சினிமா மற்றும் டிவி பிரபலங்களுடன் தொடர்பை வளர்த்து வந்த விஜய் வர்மாவுக்கு மாடலிங் மற்றும் சினிமா ஆர்வம் வந்திருக்கிறது. தன்னுடைய மீடியா தொடர்பு மூலமே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பையும் இவர் பெற்றார் எனச் சொல்கிறார்கள். கேப்டன் என்ற பெருமையுடன் நிகழ்ச்சிக்குச் சென்றவரின் செயல்பாடுகள் அந்த வீட்டுக்குள் சிறப்பாக இல்லை என்பது முதல் வாரமே தெரிந்துவிட்டது.
சக போட்டியாளர்களிடம் மிரட்டல் தொனியில் பேசுவது, முரட்டுத்தனமான சைகை மொழியில் பேசுவது, கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துவது என நடந்து கொண்டதால் கமலே மஞ்சள் கார்டு கொடுத்து எச்சரிக்கை விடுத்தது நினைவிருக்கலாம்.
முதல் வார எச்சரிக்கையையும் கண்டு கொள்ளாமல் தனது போக்கை மாற்றிக் கொள்ளாத விஜய் வர்மா சில தினங்களுக்கு முன் நடந்த டாஸ்குகளின் போது மீண்டும் விஷ்ணுவுடன் மோதினார்.
‘நடிகனுக்குத் தேவையே முகம்தான். டாஸ்க் அது இதுன்னு இவனுடன் மல்லுக்கட்டினா, அட்டாக் பண்ணி அந்த முகத்தையே பாழாக்கிடுவான் போல’ என விஷ்ணுவே சக போட்டியாளர்கள் மத்தியில் புலம்பியதெல்லாம் கூட நடந்தது. பிரதீப்பை இவர் தாக்கியதும் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்தச் சூழலில் இன்று நடந்த எவிக்ஷனில் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப் பட்டிருக்கிறார். அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பவும் வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள். விஜய் வெளியேறிய எபிசோடு நாளை ஒளிபரப்பாக இருக்கிறது.
+ There are no comments
Add yours