சென்னை: நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தேவநாதன் யாதவ் தொடர்புடைய 27 வங்கிக் கணக்குகள் இதுவரை முடக்கப்பட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூரில் ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மனென்ட் ஃபண்ட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி, 144 முதலீட்டாளர்களிடம் ரூ.24.50 கோடி மோசடி செய்ததாக, அந்நிறுவன இயக்குநரான தேவநாதன் யாதவ் மற்றும் குணசீலன், மகிமைநாதன் ஆகியோரை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதைத் தொடர்ந்து, தேவநாதன் யாதவ் தொடர்புடைய மயிலாப்பூர் நிதி நிறுவனம், அவர் நடத்தி வரும் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் உள்ள அவரது அறை, தி.நகரில் உள்ள அவரது வீடு உட்பட அவர் தொடர்புடைய 12 இடங்களில் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர்.அப்போது, பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியது. இதையடுத்து, தேவநாதன் யாதவின் 5 வங்கி கணக்குகளை போலீஸார் முடக்கினர். இதற்கிடையில், கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில், தற்போது நிதி நிறுவனத்துக்கு சொந்தமான 18 வங்கி கணக்குகள், குணசீலனின் இரண்டு வங்கி கணக்குகள், மகிமை நாதனின் இரண்டு வங்கி கணக்குகள் என 22 வங்கி கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் முடக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில், இந்த மோசடி விவகாரம் தொடர்பாக மொத்தம் இதுவரை 27 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.