மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பி.டி.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார். அப்போது, “மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜ.க, 3-வது பெரிய கட்சியாக உருவெடுக்கும். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க இந்துத்துவா சித்தாந்தத்திலிருந்து விலகிச் செல்வதால் ஏற்பட்ட வெற்றிடத்தை, பா.ஜ.க நிரப்ப அதிக வாய்ப்பிருக்கிறது. ஜெயலலிதா உயிருடன் இருக்கும்வரை, அனைவரையும்விட உயர்ந்த இந்துத்துவா தலைவராக இருந்தார். இந்து மதத்தினரின் ஆதரவு அவருக்கே பெரிதும் கிடைத்தது.

அண்ணாமலை

இந்து மதத்தின் வளர்ச்சிக்காக அவர் பல சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வந்தார். அயோத்தி ராமர் கோயிலுக்கு வெளிப்படையான ஆதரவு, தமிழ்நாட்டில் மதமாற்ற தடுப்பு சட்டத்தை அமல்படுத்தியது, தன்னுடைய சம்பளத்தை கோயில்களுக்கு நன்கொடையாக அளித்தது, கோயில் நகரமான ஸ்ரீரங்கத்தில் போட்டியிட்டது, கோயில்கள் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டது, கோயில்களுக்கு யானைகளை நன்கொடையாக அளித்தது என அவருடைய இந்து மதப்பற்றை தெளிவாகவே நாம் புரிந்து கொள்ளலாம். அவரது செயல்பாடுகளை பார்த்தால் அவர் மிகவும் உயர்ந்த இந்துத்தலைவர் என்பதை புரியும்.

ஆனால், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க இந்துத்துவா கொள்கைகளில் இருந்து விலகியது. எனவே, தமிழகத்தில் உள்ள இந்துத்துவா கொள்கைக்கு ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை பா.ஜ.க நிரப்பி வருகிறது” எனத் தெரிவித்தார்.

அண்ணாமலையின் கருத்துக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மறைந்த முதல்வர் ஜெயலலிதா சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர். இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் என அனைத்து மதங்களுக்கும் பொதுவாகத் திகழ்ந்தவர்.

ஜெயக்குமார்

அனைத்து மதத்தினரையும் சமமாக மதித்தவர். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது நாட்டில் பல மாநிலங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றது. தமிழகத்தில் எந்தவித வன்முறைக்கும் இடம் அளிக்காமல் தமிழகத்தை அமைதிப் பூங்காவாக திகழச் செய்தவர் ஜெயலலிதா. பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று, மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது அவதூறு பரப்பும் நோக்கில், ஒற்றை மதவாதத்தைச் சார்ந்த தலைவர் போல பேட்டி கொடுப்பது கடும் கண்டனத்துக்குரியது.

எம்.ஜி.ஆர் வழியில், `எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்- இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்’ என்ற திராவிடக் கோட்பாட்டின் அடிப்படையில் பொற்கால ஆட்சி தந்தவர் ஜெயலலிதா. தமது ஆட்சிக் காலத்தில் முதன்முதலாக திருக்கோயில்களில் அன்னதானத் திட்டத்தை தொடங்கி வைத்தார். புனித ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிக்க அரிசி வழங்கும் திட்டம் 2001-ம் ஆண்டு அவரால் தொடங்கப்பட்டது.

எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா

புதிதாக வக்ஃபு நிறுவன மேம்பாட்டு நிதி உருவாக்கப்பட்டு, 3 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டது. வக்ஃபு வாரியத்துக்கு வழங்கப்படும் ஆண்டு நிர்வாக மானியம் 1 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. தமது ஆட்சிக் காலத்தில்தான் கிறிஸ்தவர்களின் புனித ஸ்தலமான ஜெருசலம் சென்று வருவதற்கு, அரசு நிதி உதவி அளிக்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா, அனைத்து மதங்களை சேர்ந்த மக்களை பாதுகாப்பதிலும், அவர்களின் நம்பிக்கைகளை மதித்துப் போற்றுவதிலும், எவ்வித சமரசத்துக்கும் இடமின்றி உறுதியாக இருந்திருக்கிறார்.

தமிழக அரசியல் உள்ளவரை அனைத்து மக்களுக்கும் பொதுவான தலைவராம் ஜெயலலிதாவின் நெடும்புகழ் அவ்வண்ணமே நிலைத்து நிற்கும். அண்ணாமலை, தனது சொந்த அரசியல் லாபத்துக்காகவும், தமிழகத்தில் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கிலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா இந்து மதத்தை மட்டுமே சார்ந்தவர் என்று, அவரது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் வேண்டுமென்றே பேட்டி கொடுப்பது கடும் கண்டனத்துக்குரியது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *