தயாரிப்பு நிறுவனம் மாறியது, மற்றும் வெங்கடேஷ் பட் வெளியேறியது என அடுத்தடுத்த அதிரடிகளுக்கு மத்தியில் ‘குக்கு வித் கோமாளி’ சீசன் 5 விஜய் டிவியில் கடந்த வாரம் தொடங்கியது.

வழக்கத்தை விட பிரமாண்டமாக இந்த சீசன் இருக்குமென ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி சலசலப்பைக் கிளப்பிவிட்டிருக்கிறார் நாஞ்சில் விஜயன். வெளியேறியவர், “இனி ‘பாக்ஸ் ஆபிஸ்’ நிறுவனம் (குக்கு வித் கோமாளியைத் தயாரிக்கும் கம்பெனி) எந்தவொரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளப் போவதில்லை” என்றும் சொன்னதுதான் `உள்ளே ஏதோ நடக்கிறது’ என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிற‌து.என்ன நடக்கிறது என நிகழ்ச்சி தொடர்பான ஏரியாவில் விசாரித்தோம்.

செஃப் தாமு, செஃப் வெங்கடேஷ் பட்

`ஏற்கெனவே வெங்கடேஷ் பட்- தாமு கூட்டணி இல்லாமல் ஒளிபரப்பாவதால் வழக்கமான என்டர்டெய்ன்மென்ட் மிஸ் அகுமோன்னு பயந்திட்டிருக்காங்க‌ நிகழ்ச்சியின் ரசிகர்கள். `பட்’டுக்குப் பதிலா வந்த மாதம்பட்டி ரங்கராஜுமே  இன்னும் நிகழ்ச்சிக்குள் ஓட்ட மாட்டேங்குறார். பட் இன்னொரு சேனல்ல வரப்போற நிகழ்ச்சியும் அடுத்த சில நாட்கள்ல ஒளிபரப்பாகி போட்டியைத் தர இருக்குது.
இந்தச் சூழல்ல இந்த மாதிரியான சின்னச் சின்னச் சலசலப்புகள் தேவையில்லாததுதான். தயாரிப்புத் தரப்புக்கும் போட்டியாளர்கள் சிலருக்குமிடையில் கம்யூனிகேஷன்ல ஏதோ பிரச்னைனு சொல்றாங்க. நாஞ்சில் விஜயன் விவகாரத்துலயும் மிஸ் கம்யூனிகேஷன் தான் காரணமா சொல்லப்படுது’ என்கிறார்கள் சிலர்.

நாஞ்சில் விஜயனின் நட்பு வட்டத்தில் சிலரிடம் பேசிய போது,
”ஷோவுக்குக் கூப்பிடும்போது, நிகழ்ச்சி முழுக்கவே வருவீங்கனு சொல்லித்தான் கூப்பிட்டிருக்காங்க‌. ஆனா, முதல் எபிசோடு ஷூட்டிங் போன பிறகுதான், தான் ஏமாத்தப் பட்டுட்டோமோன்னு சிலரை குறிப்பா கோமாளிகளை நினைக்க வச்சிருக்கு. ஏன்னா, கோமாளிகளாக கலந்துக்கிறதுக்காக பல பேர் கிட்டப் பேசியிருக்காங்க. எல்லார்கிட்டயுமே முழு ஷோவும் வருவீங்கன்னு சொல்லியிருக்காங்க. ஆனா ஷூட்டிங்ல பார்த்தீங்கன்னா ஏற்கெனவே முந்தைய சீசன்கள்ல கலந்து கிட்ட பழைய கோமாளிகளுக்கே ரொம்ப முக்கியத்துவம் தரப்பட்டிருக்கு. இவங்களைச் சும்மா பேருக்குப் பயன்படுத்தற ஒரு போக்கு தெரிஞ்சிருக்கு. ஷூட்டிங் நடக்கிற நாள்ல பழைய கோமாளிகள் யாரும் இல்லாட்டிதான் புதுக் கோமாளியைத் தேடியிருக்காங்க.

CWC 5

சில கோமாளிகள் இது குறித்த தங்களுடைய அதிருப்தியையும் வெளிப்படுத்திட்டாங்க. ‘சப்ஸ்ட்யூட் மாதிரி எங்களைப் பயன்படுத்துவீங்கன்னு தெரிஞ்சா வந்திருக்கவே மாட்டோமே, நிகழ்ச்சி முழுக்க வருவீங்கன்னு சொல்லித்தானே கூப்பிட்டீங்க, இப்ப ஏன் இப்படி நடந்துக்கறீங்க’ எனக் கேட்ட சிலருக்கு சரியான பதிலே கிடைக்கலையாம். இதே நிலைமைதான் விஜயனுக்கும் நிகழ, கடுப்பாகி வெளியேறிட்டார். அந்தக் கோபத்துலயே அது குறித்து சமூக ஊடகத்துலயும் பதிவு போட்டுட்டார். பிறகு நிகழ்ச்சி தொடர்பான சிலர் தொடர்பு கொள்ள‌, அந்தப் பதிவை நீக்கிவிட்டார். ஆனா ரொம்பவே வருத்தத்துலதான் இருக்கார்” என்றனர் அவர்கள்.

விஜயன் போலவே கோமாளிகளாக வரும் மேலும் சிலருமே ஒருவித அதிருப்தியில்தான் இருக்கிறார்களாம். இவர்களுமே எந்நேரமும் வெளியேற வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது. `ஷூட்டிங் ஷெட்யூலில் உண்டாகும் ஒரு சாதாரண‌ பிரச்னைதான் இது. அதனால் இது ஒரு விஷயமே இல்லை. சரி செய்துவிடலாம்’ என இந்த விஷயம் குறித்து அலட்டிக் கொள்ளவில்லையாம் தயாரிப்புத் தரப்பு. இதற்கிடையில் நிகழ்ச்சியில் விஜய் டிவியின் செல்லப் பிள்ளை என்பதால் பிரியங்காவுக்கும், பாக்ஸ் ஆபிஸ் தயாரிக்கும் சீரியலில் நடிப்பதால் அன்ஷிதாவுக்கும் தனி முக்கியத்துவம் தரப்படுவதாகவும் சிலர் புகைச்சலைக் கிளப்பத் தொடங்கியிருக்கிறார்கள்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *