பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உபகோயிலான பெரியநாயகி அம்மன் கோயிலில் மே 16 -ம் தேதி கொடியேற்றத்துடன் வைகாசி விசாக விழா தொடங்கியது. வசந்த உற்சவம் என அழைக்கப்படும் இவ்விழா 10 நாள்கள் கொண்டாடப்படும்.

திருத்தேரில் எழுந்தருளிய சுவாமி

இதில் தினந்தோறும் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை சமேதராக தங்கமயில், வெள்ளியானை உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்வு நடக்கும். ஆறாம் நாள் நிகழ்வில் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் வெகுவிமர்சியாக நடைபெற்றது. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் பக்தர்கள் வெள்ளத்தில் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து தீர்த்தக்காவடி, ரதக் காவடி எடுத்து வந்து கலந்துகொண்டனர்.

நேற்று முன் தினம் காலை 11.30 மணிக்கு திருத்தேர் ஏற்றம் நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை சுவாமி திருத்தேரில் எழுந்தருளினார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

ரத வீதியில் வந்த தேர்

தேரின் பின்னே கோயில் யானை கஸ்தூரியும் சென்றது. கிழக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி, மேற்கு மற்றும் வடக்கு ரத வீதிகளில் சுற்றி வந்த தேர் நிலைக்கு வந்து சேர்ந்தது. தேர் நிலைக்கு வந்தும் மீண்டும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று இரவு தங்கக்குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடும் இன்று இரவு தங்கமயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறவுள்ளன.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *