மதுரை மாவட்டம் மேலூர் பக்கத்தில் உள்ள கிராமம் ஒன்றிலிருந்து சங்கர நாராயணனும் (ராமராஜன்) அவரது நண்பர் மூக்கையாவும் (எம்.எஸ்.பாஸ்கர்), சென்னையில் உள்ள அவர்களது நண்பர் ஃபஸில் பாய்யின் (ராதாரவி) வீட்டிற்கு விருந்தினர்களாக வருகிறார்கள். மறுநாள், தியாகராயர் நகரில் உள்ள வங்கி ஒன்றுக்குப் போகும் சங்கர நாராயணன், வெடிகுண்டையும் துப்பாக்கியையும் காட்டி மிரட்டி, அவ்வங்கியைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறார். வங்கி ஊழியர்களையும் வாடிக்கையாளர்களையும் பிணைக் கைதியாக்குகிறார்.

மறுபுறம், அவ்வங்கி கிளையின் மேலாளரின் வீட்டை மூக்கையாவும், துணை மேலாளர் வீட்டை ஃபாஸில் பாயும் துப்பாக்கி முனையில் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்கள். மூன்று சீனியர் சிட்டிசன்களின் சீற்றத்திற்கு என்ன காரணம், இம்மூவரின் பின்னணி என்ன, இறுதியில் பிணைக்கைதிகளாக இருப்பவர்களைக் காவல்துறை மீட்டதா போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருக்கிறது இயக்குநர் இராகேஷின் ‘சாமானியன்’.

Saamaniyan Review

தொடக்கத்திலிருந்தே கருத்து ஊசி போட்டபடியே தப்பிக்கும் கதாநாயகன் ராமராஜன், ஆக்‌ஷனையும் மிரட்டலையும் கையிலெடுக்கும்போது நடிப்பில் மிகவும் சிரமப்படுகிறார். இறுதிக்காட்சிக்கு முந்தைய சென்டிமென்ட் தொகுப்பில் மட்டும் விட்டதைப் பிடித்திருக்கிறார். பாசம், ஆக்ரோஷம் என இரண்டு வெவ்வேறு மீட்டரில் ஓடும் கதாபாத்திரத்திற்கு தன் முதிர்ச்சியான நடிப்பால் உயிர் கொடுத்திருக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். ராதாரவியின் பங்களிப்பும் தேவையான அழுத்தத்தைக் காட்சிகளுக்குக் கொடுத்திருக்கிறது.

நக்‌ஷா சரணும், லியோ சிவக்குமாரும் இரண்டாம் பாதி சென்டிமென்ட் காட்சிகளுக்குத் தேவையான உணர்வுகளைக் கடத்தி, கவனிக்க வைக்கிறார்கள். ஒரு ‘டெம்ப்ளேட்’ வில்லனாக பாஸ் மட்டும் ஆகிறார் ‘மைம்’ கோபி. போஸ் வெங்கட், கே.எஸ்.ரவிக்குமார், தீபா சங்கர், ஸ்மிருதி வெங்கட், முல்லை, அபர்ணதி என ஒரு பட்டாளமே துணைக் கதாபாத்திரங்களாக வந்து, கொடுத்த வேலையை மட்டும் செய்திருக்கின்றனர்.

சி.அருள் செல்வனின் ஒளிப்பதிவு எவ்வித நேர்மறையான தாக்கத்தையும் படத்திற்கு வழங்கவில்லை. அளவிற்கு மீறி ஓடும் பின்கதையைச் செறிவாக்கத் தவறுகிறது ராம் கோபியின் படத்தொகுப்பு. இளையராஜாவின் இசையிலும் வரியிலும், சரத்தின் குரலிலும் ஒலிக்கும் ‘கண்ணான கண்ணே’ பாடல் மட்டும் பொருத்தமான இடத்தில் கனத்தைத் தருகிறது. தன் பின்னணி இசையால் முடிந்தளவிற்குக் காட்சிகளை மெருகேற்ற உதவியிருக்கிறார் இளையராஜா.

Saamaniyan Review

எளிமையான கதாபாத்திரங்களின் எளிமையான அறிமுகம், ஒரு அதிரடி திருப்பம், மாஸ் ட்விஸ்ட், சோகமான பின்கதை, ‘கருத்து ஊசி’ மாநாடு, சுபம் என்று எளிதில் யூகிக்கக்கூடிய, ஒரு டெம்ப்ளேட்டான கதையைத் தந்திருக்கிறார் கதாசிரியர் வி.கார்த்திக் குமார். புதுமையில்லாத திரைக்கதை என்றாலும், நடிகர்களின் பங்களிப்பால் முடிந்தளவிற்கு விறுவிறுப்பையும் எமோஷனையும் கலந்து தப்பிக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் இராகேஷ். ஒரு சில காட்சிகளிலேயே நேராகக் கதைக்குள் நுழைந்துவிடுகிறது படம். அதற்குப் பிறகு ஆங்காங்கே லாஜிக் காணாமல் போவதும், தேய்ந்து போன காவல்துறை – கொள்ளையர் காட்சிகளும் என்பதாக டல்லடிக்கிறது படம்.

மூன்று பிரதான கதாபாத்திரங்களும் அவர்களின் உடல்மொழியும், குணாதிசயங்களும், சில பரபர காட்சிகளும் கொஞ்சம் வெளிச்சம் தருகின்றன. ராமராஜன் – இளையராஜா கூட்டணியின் பாடல்கள், ராமராஜன் – ‘செண்பகமே’ மாடு ரெபரென்ஸ் என ஆங்காங்கே இன்னும் சில விஷயங்கள் திகட்டவில்லை. அதேநேரம், வாட்ஸ்அப் ஃபார்வேர்டு மெசேஜ்கள், பெருவெள்ள கால சென்னை குறித்த ஏளனப் பார்வை, சொந்த ஊர்ப் பெருமைகள் போன்றவை ரசிக்கும்படியாக இல்லை.

இரண்டாம் பாதியில் வரும் அழுத்தமான பின்கதையானது, நடிகர்களின் நடிப்பால் தேவையான தாக்கத்தையும் கனத்தையும் கடத்திவிடுகிறது என்றாலும், பாடல்கள், நீண்ட காட்சிகள் என அந்த எபிசோடு சீரியலாக நீண்டு கொண்டே போவது அயர்ச்சியையே தருகிறது. ராமராஜனின் பின்கதையை கார்ட்டூன் வடிவத்தில் கச்சிதமாகக் கடத்தியது ரசிக்க வைக்கிறது.

Saamaniyan Review

இறுதிக்காட்சிக்கு முந்தைய உணர்வுபூர்வமான இடங்கள் க்ளிக் ஆகியிருந்தாலும், அதோடு சேர்ந்து நான்கு பக்க கருத்து ஊசியையும் குத்துகிறார் இயக்குநர். வங்கிகள் மற்றும் கட்டுமான நிறுவனங்களுக்கு இடையிலான திருட்டு உறவானது, வீட்டுக்கடன் மூலமாக மக்களை எப்படிச் சுரண்டுகிறது என்ற லைன் சுவாரஸ்யமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தித் திணிப்பு, பெருமுதலாளிகளுக்கு வழங்கப்படும் கடன் ‘வாராக்கடன்’ ஆக ஆவது போன்றவற்றை ஒன்லைனர்களில் கலாய்க்கிறது படம். அதேநேரம் ஒட்டுமொத்தமாக வீட்டுக்கடன் மீதான மோசமான பார்வையை, எவ்வித தரவுகளுமின்றி முன்வைக்கிறது படம்.

சமகால திரைமொழி வடிவுடனும், ரசிக்கும்படியான திரைக்கதையுடனும் படத்தை மெருகேற்றி இருந்தால், இந்த `சாமானியனை’ இறுக்கமாகக் கட்டித் தழுவியிருக்கலாம்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *