சென்னை: விஷால் நடித்துள்ள ‘ரத்னம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘தாமிரபரணி’, ‘பூஜை’ படங்களுக்குப் பிறகு ஹரி – விஷால் கூட்டணியில் உருவாகும் முன்றாவது படம் ‘ரத்னம்’. இதில் விஷால் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். மேலும், கவுதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, யோகிபாபு உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
விஷாலின் 34-வது படமான இதை ஜீ ஸ்டூடியோஸ் சவுத் மற்றும் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் இம்மாதம் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? – பொதுவாக நெல்லை, தூத்துக்குடியை களமாக கொண்டிருக்கும் ஹரி இம்முறை ஆந்திரா பக்கம் சென்றுள்ளார். நகரி, சித்தூர், ஆந்திரா, தெலங்கானா என்ற வசனங்கள் வந்து செல்கின்றன. இடம் மாறினாலும், கதை என்னமோ ஒரே மாதிரியாக இருப்பதை ட்ரெய்லரின் காட்சிகள் உணர்த்துகின்றன.
‘பூஜை’ படத்தில் ஸ்ருதிஹாசனை காப்பாற்றுவது போல, இதில் பிரியா பவானி சங்கரை எதிரிகளிடமிருந்து மீட்டு, ‘அந்த பொண்ணு என் உயிர், என் மூச்சு’ என வசனம் பேசுகிறார் விஷால்.
காலத்துக்கேற்ற மாற்றமாக கெட்ட வார்த்தைகளை சேர்த்துள்ளார். ஆனால், அவரது படங்களில் வரும் வழக்கமான குடும்ப உறவுகள் சென்டிமென்ட் ட்ரெய்லரில் காணவில்லை. திடீரென வந்து “ஒருத்தருமே உயிரோட இருக்கமாட்டீங்க அடிச்சுத்தூக்கிருவேன்” என கோர்ட் சூட் போட்டு வீரமாக வசனம் பேசுகிறார் கவுதம் வாசுதேவ் மேனன்.
முழுக்க முழுக்க ஆக்ஷனை மட்டுமே நம்பி ஹரி களமிறங்கியிருப்பதை காட்சிகள் உணர்த்துகின்றன. கதையின் போக்கை கணிக்கும் காட்சிகளோ, காமெடியோ எதுவுமே ட்ரெய்லரில் இடம்பெறவில்லை.
இயக்குநர் ஹரியை பொறுத்தவரை அவர் இயக்கத்தில் வெளியான ‘சாமி 2’, ‘யானை’ ஆகிய இரண்டு படங்களும் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. தற்போது விஷால் காம்போவில் உருவாகியுள்ள இப்படம் அவரை மீட்டெடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ட்ரெய்லர் வீடியோ: