பிரபல சினிமா தயாரிப்பாளர் சவுந்தர்ய ஜெகதீஷ் தற்கொலை
15 ஏப், 2024 – 10:59 IST
மஹாலட்சுமி லே அவுட் : கன்னட திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் சவுந்தர்ய ஜெகதீஷ், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூரின் மஹாலட்சுமி லே அவுட்டில் வசித்தவர் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சவுந்தர்ய ஜெகதீஷ், 55. இவர் அப்பு பப்பு, மஸ்த் மஜா மாடி, ஸ்னேஹிதரு, ராம்லீலா உட்பட சில படங்களை தயாரித்தார். அனைத்து படங்களும் சூப்பர் ஹிட்டாக ஓடி வருவாயும் கிடைத்தது. பட தயாரிப்பு மட்டுமின்றி, ரியல் எஸ்டேட் தொழிலும் செய்தார். பெங்களூரில், ‘ஜெட்லாக்’ என்ற பெயரில் பப் நடத்துகிறார். சமீபத்தில் நடிகர் தர்ஷன் நடித்த காட்டேரா படத்தின் வெற்றியை கொண்டாட, இந்த பப்பில் தான் பார்ட்டி நடந்தது.
நிர்ணயித்த நேரத்தை விட, அதிக நேரம் பார்ட்டி நடந்தது குறித்து, சுப்ரமண்யநகர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவானது. தர்ஷன், ராக்லைன் வெங்கடேஷ் உட்பட எட்டு பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. வழக்கு தொடர்பாக, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. திரைப்படம் ஒன்றில் தன் மகனை ஹீரோவாக அறிமுகம் செய்யவும், சவுந்தர்ய ஜெகதீஷ் திட்டமிட்டிருந்தார். இதற்காக ஏற்பாடுகளும் செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை, 9:00 மணிக்கு மேலாகியும், இவரது அறைக்கதவு திறக்கப்படவில்லை, தட்டியும் பதில் இல்லை. சந்தேகமடைந்த குடும்பத்தினர், கதவை உடைத்து பார்த்த போது, சவுந்தர்ய ஜெகதீஷ், துாக்கில் தொங்குவது தெரிந்தது. உடனடியாக கீழே இறக்கி, மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். பரிசோதித்த டாக்டர், ஜெகதீஷ் இறந்து விட்டதாக கூறினர்.
இவரது தற்கொலைக்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை. இவரது மாமியார் சமீபத்தில் காலமானார். இவர் மீது ஜெகதீஷ் அதிகமான அன்பு வைத்திருந்தார். மன அழுத்தத்தில் இருந்ததாக குடும்பத்தினர் கூறுகின்றனர். பொருளாதார பிரச்னையும் இருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.
தயாரிப்பாளர் சவுந்தர்ய ஜெகதீஷின் மறைவுக்கு, திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மஹாலட்சுமி லே அவுட் போலீஸ் நிலையத்தில், வழக்கு பதிவாகிஉள்ளது.
+ There are no comments
Add yours