சென்னை: சென்னை புதுவண்ணாரப்பேட்டை தேசியநகர் 4-வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (34). சமையல் கான்ட்ராக்ட் வேலை செய்து வருகிறார். கடந்த 28-ம் தேதி இரவு 10 மணி அளவில் இவரது வீட்டருகே இளைஞர்கள் 3 பேர் புகை பிடித்தபடி கத்திக் கொண்டிருந்தனர். அவர்கள் கஞ்சா புகைத்து போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

அவர்களிடம் சென்ற சிவா, ‘‘பெண்கள், குழந்தைகள் எல்லாரும் தூங்கும் நேரம். இங்கு ஏன் சத்தம் போடுகிறீர்கள், வேறு எங்காவது சென்று பேசுங்கள்’’ என கூறியுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த 3 பேரும், சிவாவிடம் வாக்குவாதம் செய்துவிட்டு கோபத்துடன் அங்கிருந்து சென்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு சிவக்குமார் வீட்டுக்கு வந்த 3 பேர் கும்பல், அவரது வீடு மீது பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பியது. அந்த குண்டு வீட்டின் வெளியே உள்ள இரும்பு கேட் அருகில் விழுந்து தீப்பற்றியதால் அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.

இதுகுறித்து புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் சிவக்குமார் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தனர். முதல்கட்டமாக சம்பவ இடத்தைச் சுற்றி பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில், அதே பகுதியைச் சேர்ந்தமனோஜ் குமார் (19), நண்பர்கள் இருவருடன் சேர்ந்து பெட்ரோல் குண்டை வீசியது தெரியவந்தது.

இதையடுத்து தலைமறைவாக இருந்த மனோஜ் குமார், அவரது நண்பர் பிரவீன்ராஜ் (22) இருவரையும் போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர். மனோஜ் குமார் மீது 11 வழக்குகள் உள்ளதும், பிரவீன் ராஜ் மீது போக்சோ வழக்கு உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *