புதுடெல்லி: வரும் திங்கட்கிழமை நடைபெறும் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் தான் பங்கேற்க உள்ளதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி நகரில் அமைந்துள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. சுமார் 2.7 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள், பல துறை பிரபலங்கள், சாதுக்கள், பொதுமக்கள் பங்கேற்க உள்ளனர். இதில் ஹர்பஜன் சிங்கும் பங்கேற்க உள்ளார்.

“பகவான் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு யார் செல்கிறார்கள், யார் செல்லவில்லை என்ற விவரம் எனக்கு வேண்டியதில்லை. காங்கிரஸ் கட்சியோ அல்லது வேறு எந்த கட்சியாக இருந்தாலும் அன்று சென்றாலும், செல்லாமல் இருந்தாலும் நான் செல்வது உறுதி. இந்த விவகாரத்தில் இதுதான் எனது நிலைப்பாடு. நான் கடவுள் இருக்கிறார் என நம்புகிறேன். நான் அங்கு செல்வதில் யாருக்காவது பிரச்சினை இருந்தால் அவர்களுக்கு வேண்டியதை செய்து கொள்ளட்டும்.

இந்த நேரத்தில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது நமது பாக்கியம். நான் நிச்சயம் சென்று பகவான் ராமரின் ஆசியை பெறுவேன். அனைவரும் அதை பெற வேண்டும்” என ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.

ராமர் கோயில் திறப்பு விழாவை மத்தியில் ஆளும் பாஜக எதிர்வரும் மக்களவை தேர்தலுக்கான துருப்பு சீட்டாக பயன்படுத்த முயல்வதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. ராமர் கோயில் திறப்பு ஆன்மிகமா அல்லது வாக்கு வங்கியா என்ற விவாதமும் எழுந்துள்ளது. ராமர் கோயில் திறப்புக்குப் பிறகு, தனது குடும்பத்தினருடன் அக்கோயிலுக்கு செல்வேன் என ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் அண்மையில் தெரிவித்திருந்தார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *