புதுடெல்லி: முழங்கால் காயத்தில் இருந்து மீண்டுள்ள இந்திய நட்சத்திர பாட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து, ஆசிய அணிகள் சாம்பியன்ஷிப் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார்.

ஆசிய அணிகள் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் வரும் பிப்ரவரி 13-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை மலேசியாவில் உள்ள ஷா ஆலம் நகரில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் மகளிர் பிரிவில் பி.வி.சிந்து இடம் பெற்றுள்ளார். முழங்கால் காயம் காரணமாக அவர், கடந்த ஆண்டு நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் தொடருக்கு பின்னர், சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ளவில்லை.

தற்போது முழு உடற்தகுதியை அடைந்ததால் ஆசிய அணிகள் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த தொடர் இந்தியவீரர், வீராங்கனைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு மலேசிய போட்டியின் வாயிலாக கணிசமான புள்ளிகளை பெற முடியும்.

மகளிர் அணியில் சிந்துவுடன் 16 வயதான சீனியர் தேசிய சாம்பியனான அன்மோல் கார்ப், ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற தன்வி சர்மா, அஷ்மிதா சாலிஹா ஆகியோரும் ஒற்றையர் பிரிவில் இடம் பெற்றுள்ளனர்.

ஆடவர் பிரிவில் உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற ஹெச்.எஸ்.பிரனோய் அணியை வழிநடத்த உள்ளார். காமன்வெல்த் விளையாட்டில் தங்கம் வென்ற லக்சயா சென், முன்னாள் உலக நம்பர் 1 வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்த், லக்சயா செனின் சகோதரர் ஷிராக் சென் ஆகியோரும் ஒற்றையர் பிரிவில் களமிறங்க உள்ளனர்.

ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி மகளிர் இரட்டையர் பிரிவில் களமிறங்குகிறது. இந்த ஜோடி கடந்த ஆண்டு துபாயில் நடைபெற்ற ஆசிய கலப்பு அணிகள் சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்திருந்தது. இவர்களுடன் அஸ்வினி பொன்னப்பா – தனிஷா கிரஸ்டோ, பிரியா தேவி கொஞ்செங்பம் – ஸ்ருதி மிஸ்ரா ஜோடிகளும் இரட்டையர் பிரிவில் அசத்த காத்திருக்கிறது.

ஆடவர் இரட்டையர் பிரிவில் 2023-ம் ஆண்டில் ஆசிய விளையாட்டு மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப் உட்பட 6 பட்டங்களை வென்றசாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி,ஷிராக் ஷெட் ஜோடி களமிறங்குகிறது. இவர்களுடன் மற்ற இரு ஜோடிகளாக துருவ் கபிலா-எம்.ஆர்.அர்ஜூன், சூரஜ் கோலா- பிருத்வி ராய் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய அணி விவரம் – ஆடவர்: ஹெச்.எஸ்.பிரனோய், லக்சயா சென், கிடாம்பி ஸ்ரீகாந்த், ஷிராக் சென், சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி, துருவ் கபிலா, எம்.ஆர்.அர்ஜூன், சூரஜ் கோலா, பிருத்வி ராய்.

மகளிர்: பி.வி.சிந்து, அன்மோல் கர்ப், தன்வி சர்மா, அஷ்மிதா சாலிஹா, ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த், அஸ்வினி பொன்னப்பா, தனிஷா கிரஸ்டோ, பிரியா தேவி கொஞ்செங்பம், ஸ்ருதி மிஸ்ரா.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *