இந்தியாவில் தற்போது நடைமுறையில் இருக்கும் இந்திய தண்டனைச் சட்டம் 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1898, இந்திய சாட்சியச் சட்டம் 1872 ஆகியவை ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டவை.

அமித் ஷா, மோடி

இந்த மூன்று சட்டங்களையும் மாற்ற வேண்டும் என்று முடிவுசெய்த மத்திய பா.ஜ.க அரசு, ‘பாரதிய நியாய சன்ஹிதா, ‘பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா‘, ‘பாரதிய சாட்சிய அதினியம்’ ஆகிய மூன்று மசோதாக்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது.

பெரும்பாலான எதிர்க்கட்சி எம்.பி-க்களை கூட்டத்தொடர் முழுமைக்கும் சஸ்பெண்ட் செய்துவிட்டு, மசோதாக்களை நிறைவேற்றும் முனைப்பில் இருக்கிறது மத்திய அரசு. இந்த மூன்று மசோதாக்கள்மீதான விவாதம் மக்களவையில் டிசம்பர் 19-ம் தேதியன்று தொடங்கியது. எதிர்க்கட்சி எம்.பி-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், விவாதத்தில் யார் பங்கேற்பார்கள்? ஆளுங்கட்சி எம்.பி-க்கள் மட்டுமே விவாதத்தில் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

அமித் ஷா

அந்த ‘விவாத’த்துக்குப் பதிலளித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். அப்போது, ‘விரிவான ஆலோசனைக்குப் பிறகு இந்த மூன்று மசோதாக்களிலும் திருத்தங்கள் செய்யப்பட்டு தாக்கல் செய்யப்பட்டன. காலனிய காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் தண்டனை வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தனவே ஒழிய, அவை நீதியை வழங்கவில்லை. இந்த புதிய குற்றவியல் சட்டங்கள், இந்திய சூழலுக்கு ஏற்ப நீதி அமைப்பை உறுதிசெய்யும்’ என்றார் அமித் ஷா.

மூன்று மசோதாக்களின் முக்கிய அம்சங்களை அறிந்துகொள்ளலாம். ‘புகார் பெற்ற மூன்று நாள்களில் முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்து, 14 நாள்களில் முதற்கட்ட விசாரணையை முடிக்க வேண்டும். விசாரணை அறிக்கையை 24 மணி நேரத்தில் நீதிபதியிடம் தாக்கல் செய்ய வேண்டும். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதை 180 நாள்களுக்கு மேல் தாமதம் செய்யக் கூடாது’ ஆகிய அம்சங்கள் மசோதாவில் இடம்பெற்றிருக்கின்றன.

நாடாளுமன்றம்

மேலும், ‘வழக்கின் தீர்ப்பை 45 நாள்களுக்கு மேலாக நீதிபதிகள் ஒத்திவைக்கக் கூடாது. வழக்கிலிருந்து விடுவிக்க குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஏழு நாள்கள் அவகாசம் அளிக்கப்படும். அந்த ஏழு நாள்களில் நீதிபதிகள் விசாரணையை நடத்தி அதிகபட்சமாக 120 நாள்களில் வழக்கு விசாரணை முடிவுபெற வேண்டும். 30 நாள்களுக்குள் குற்றத்தை ஒப்புக்கொண்டவர்களுக்கு தண்டனை குறைக்கப்படும். 30 நாள்களுக்குள் ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்’ ஆகிய அம்சங்களும் மசோதாவில் இருக்கின்றன.

புதிய மசோதாவில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புதிய அத்தியாயம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. தற்கொலை முயற்சி என்ற பிரிவு நீக்கப்பட்டிருக்கிறது. பயங்கரவாதச் செயல், கும்பல் தாக்குதல், குற்றங்கள் செய்ய குழந்தைகளை வாடகைக்குப் பெறுதல், இந்தியாவின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்தை விளைவித்தல், தாக்கிவிட்டு தப்பி ஓடுதல், தவறான அல்லது பொய்ச் செய்திகளை வெளியிடுதல் என புதிய மசோதாவில் புதிதாக சில குற்றங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

நாடாளுமன்றம் – எதிர்க்கட்சி எம்.பி-க்கள்

காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பி-க்கள் இல்லாத நிலையில், மூன்று மசோதாக்களுக்கும் அவையில் ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. அப்போது, ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் எம்.பி-யான அசாதுதீன் ஓவைசி அவையில் இருந்தார். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளத்தின் எம்.பி-க்களும், பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி-க்களும் அவையில் இருந்தனர்.

குற்றவியல் மசோதாக்கள்மீது எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினர் நிறைய விமர்சனங்களை வைத்ததைத் தொடர்ந்துதான், பல திருத்தங்களுடன் மூன்று மசோதாக்களை பா.ஜ.க அரசு கொண்டுவந்திருக்கிறது. ஆனால், திருத்தப்பட்ட மசோதாக்களின்மீதான விமர்சனங்களை வைப்பதற்கு அவையில் எதிர்க்கட்சிகள் இல்லை.

எதிர்க்கட்சி எம்.பி-க்கள்

மாநிலங்களவையை அதன் தலைவர் எப்படி நடத்துவார் என்பதை கிண்டலாக நடித்துக் காண்பித்தது மாபெரும் குற்றம் என்றால், எதிர்க்கட்சி எம்.பி-க்களை வெளியேற்றிவிட்டு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த மசோதாக்கள் நிறைவேற்றப்படுவதை என்னவென்று சொல்வது?

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *