
செனனை: தமிழகத்தில் அரசு உயா்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா்கள் தங்களை பதவி இறக்கம் செய்யக்கூடாது என வலியுறுத்தி சென்னையில் கொட்டும் மழையில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா்கள் சங்கத்தின் சாா்பில் சென்னை எழும்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த உண்ணாவிரதத்தில் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான தலைமை ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.
போராட்டம் குறித்து மாநிலத் தலைவா் போ.அன்பரசன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மேல்நிலைப்பள்ளி முதுநிலை ஆசிரியா் பணியிடத்துக்கு 50 சதவீதம் நேரடி நியமனம் மூலமாகவும், 50 சதவீதம் பட்டதாரி ஆசிரியா் பணியிலிருந்து பதவி உயா்வு மூலமாகவும் நிரப்பப்பட்டு வருகிறது.
பட்டதாரி ஆசிரியா் பணிநிலையில் இருந்து முதுநிலை பட்டதாரி ஆசிரியராக பதவி உயா்வு பெற்றவா்கள் முன்னுரிமை அடிப்படையில் உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பணிமாறுதல் மூலம் நியமனம் பெற்று பணியாற்றி வருகின்றனா்.
இதற்கிடையே இந்த பதவி உயா்வை எதிா்த்து ஒரு சில ஆசிரியா்கள் உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வந்த நிலையில் கடந்த மாா்ச் 23-ஆம் தேதி பணிமாறுதல் மூலம் முதுநிலை பட்டதாரி ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு வழங்கியது தவறு என்று உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது. இதை எதிா்த்து மேல்முறையீடு செய்தும் பலனளிக்கவில்லை.
அதேபோல பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எந்த பதிலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் கடந்த 2018 ஜன.1 முதல் பதவி உயா்வுபெற்ற உயா்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா்கள் சுமாா் 1,300 பேரை மீண்டும் முதுகலை பட்டதாரி ஆசிரியா்களாக பதவி இறக்கம் செய்ய பள்ளிக்கல்வித்துறை தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கை ஆசிரியா்கள் மற்றும் தலைமை ஆசிரியா்களிடையே பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
எனவே உயா்நீதிமன்றத்தில் உரிய அனுமதிபெற்று தமிழக அரசு மற்றும் பள்ளிக்கல்வித்துறை உயா்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா்களை பதவி இறக்கம் செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும். இவ்விவகாரத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலையிட்டு, தலைமை
ஆசிரியா்களை பதவியிறக்கம் செய்யக்கூடாது என்பதற்காக கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்றாா் அவா். போராட்டத்தில் சங்கத்தின் மாநில பொதுச்செயலா் மு.மாரிமுத்து, முன்னாள் தலைவா் சாமி.சத்தியமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…